ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்கியது. பெர்த் நகரில் துவங்கிய அந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் அதற்கு தகுந்தாற்போல் பேட்டிங் செய்யாத இந்திய அணி ஆரம்பம் முதலே சுமாராக விளையாடி 150க்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணிக்கு இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால், படிக்கல் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். அதே போல துருவ் ஜுரேல் 11, வாஷிங்டன் சுந்தர் 4 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் மறுபுறம் நங்கூரமாக விளையாடிய ராகுல் சர்ச்சையான தீர்ப்பால் வெளியேறினார். அப்போது மிடில் ஆர்டரில் தம்முடைய ஸ்டைலில் விளையாடிய ரிஷப் பண்ட் 37 ரன்கள் குவித்து அசத்தினர்.
ரிஷப் பண்ட் சாதனை:
குறிப்பாக பட் கமின்ஸ்க்கு எதிராக ஏபி டீ வில்லியர்ஸ் போல முழுமையான பேலன்ஸ் இல்லாமலேயே அவர் அடித்த சிக்சர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அவருடன் சேர்ந்து விளையாடிய நித்திஷ் ரெட்டி அதிகபட்சமாக 41 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
முன்னதாக ஆஸ்திரேலிய மண்ணில் ரிஷப் பண்ட் எப்போதுமே மிகச் சிறப்பாக விளையாடி வருவதை அனைவரும் அறிவோம். அந்த வகையில் இதுவரை அவர் ஆஸ்திரேலிய மண்ணில் 13 இன்னிங்சில் 650 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர் என்ற மாபெரும் உலக சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.
உலக சாதனை:
இதற்கு முன்பாக இங்கிலாந்தின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆலன் நாட் 643 ரன்களை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் குவித்ததே முந்தைய சாதனை. தற்போது அவருடைய சாதனையை உடைத்து ரிஷப் பண்ட் புதிய சாதனை படைத்துள்ளார். இது போக ஆஸ்திரேலிய மண்ணில் சதம்டித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் அவர் 2018 – 19 தொடரிலேயே படைத்துள்ளார்.
இதையும் படிங்க: 28 ஆண்டுகால பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் முதல் முறையாக நடந்த அறிய சம்பவம் – பும்ரா கம்மின்ஸ் ஜோடி சாதனை
அந்த வகையில் சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் தோனியால் முடியாத செயல்பாடுகளை ரிஷப் பண்ட் வெளிப்படுத்தி வருகிறார். இதை அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய பவுலர்கள் பெரிய சவாலை கொடுத்துள்ளார்கள். அதன் காரணமாக இப்போட்டியில் இந்தியா போராடி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.



