பெர்த் நகரில் ஆஸ்திரேலியா – இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்க உள்ளது. அந்தத் தொடரில் 4 போட்டிகளை வென்று 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு செல்ல இந்தியா போராட உள்ளது. அந்த தொடரில் இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நேதன் லயன் பெரிய சவாலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் எடுத்த இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வினுடன் தம்முடைய கேரியர் முழுவதும் போட்டியிடுவதாக நேதன் லயன் கூறியுள்ளார். அதே சமயம் அஸ்வினை பார்த்து தாமும் தம்முடைய கேரியரில் நிறைய கற்றுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
அஸ்வினுடன் போட்டி:
“அஸ்வின் அற்புதமான பவுலர். அடிப்படையில் அவருக்கு எதிராக நான் நேருக்கு நேராக என்னுடைய கேரியர் முழுவதும் விளையாடியுள்ளேன். அவரிடமிருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுள்ளேன். மிகவும் சாதுரியமான பவுலரான அவர் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் தன்னை வேகமாக உட்படுத்திக் கொள்வார். அதை உலகில் சிறப்பாக செய்யக்கூடிய பவுலர்களில் அவர் ஒருவர் என்று நினைக்கிறேன்”
“அவர் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளார். பொதுவாகவே உங்களுக்கு எதிராக விளையாடும் சிறந்த வீரர்களே உங்களுடைய சிறந்த பயிற்சியாளர்களாக இருப்பார்கள் என்று நான் நம்புபவன். இந்தியாவுக்கு செல்லும் முன் அஸ்வின் வீசிய போட்டிகளை நான் நிறைய பார்த்து விட்டு சென்றேன். அதே போல ஆஸ்திரேலியாவில் அவர் பந்து வீசிய ஆட்டங்களையும் பார்த்து ஏதாவது கற்றுக்கொள்ள முடியுமா என்பதைப் பார்க்கிறேன்”
அஸ்வின் – லயன் மோதல்:
“நான் கொடுக்கும் பேட்டிகளை ரவீந்திர ஜடேஜா படிப்பார் என்பதால் இந்தத் தொடரில் என்னுடைய திட்டங்கள் என்ன என்பது பற்றி என்னால் சொல்ல முடியாது. இருப்பினும் ஆஸ்திரேலியாவில் பந்தின் பின்பகுதியை அதிகமாக சுழற்றி பவுன்ஸை ஏற்படுத்தவே நான் அதிகமாக முயற்சிப்பேன். ஆனால் ஆஸ்திரேலியாவில் அதை பெறுவது மிகவும் கடினம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: இன்னும் 33 ரன்கள் அடித்தால் போதும்.. புஜாராவின் ரெக்கார்டை காலி செய்ய காத்திருக்கும் – விராட் கோலி
அதே போல லயனும் 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்து சிறந்த ஸ்பின்னராக தம்மை நிரூபித்துள்ளார். அந்த வகையில் நவீன டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் சிறந்த ஸ்பின்னர்களான அஸ்வின் – லயன் இந்த தொடரில் தங்களுடைய அணிகளுக்காக வெற்றிக்கு போராட உள்ளனர். 36 வயதை கடந்து விட்ட அவர்களும் நேருக்கு நேர் மோதுவது இதுவே கடைசி தொடராக இருக்கலாம்.



