நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்த மூன்று போட்டிகளிலும் இந்தியா அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்தது. அதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக நியூசிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது.
அது போக 93 வருடங்களில் முதன்முறையாக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒரு டெஸ்ட் தொடரில் ஒய்ட் வாஷ் அவமானத் தோல்வியையும் பதிவு செய்துள்ளது. இந்தத் தோல்விக்கு கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட மூத்த வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்காதது முக்கிய காரணமானது. முன்னதாக இந்தத் தொடர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்றது.
வரலாற்று தோல்வி:
இந்த அடுத்தடுத்த தோல்விகளால் அந்த புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா தற்போது 58.33% புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு சரிந்துள்ளது. முதல் இடத்தில் ஆஸ்திரேலியா 62.50% புள்ளிகளுடன் இருக்கிறது. 3, 4, 5 இடங்களில் இலங்கை, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா அணிகள் முறையே 55.56%, 54.55%, 54.17% புள்ளிகளுடன் உள்ளன.
தற்போதைய நிலையில் இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. எனவே ஃபைனலுக்கு மற்ற அணிகளின் உதவியை நாடாமல் நேரடியாக தகுதி பெற அந்த 5 போட்டிகளில் இந்தியா குறைந்தது 4 வெற்றிகளை பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதாவது ஆஸ்திரேலியாவில் 4 – 0 அல்லது 5 – 0 என்ற கணக்கில் இந்தியா வெல்ல வேண்டும்.
கடினமான வாய்ப்பு:
ஒருவேளை 4 – 1 என்ற கணக்கில் வென்றால் கூட நியூசிலாந்து அதனுடைய கடைசி போட்டிகளில் வென்றால் இந்தியாவை முந்தி ஃபைனலுக்கு சென்று விடும். அதே போல தென்னாப்பிரிக்கா, இலங்கை அணிகளும் இந்தியாவுக்கு போட்டியாக உள்ளது. மறுபுறம் தற்போதுள்ள ஃபார்முக்கு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 4 – 5 போட்டிகளை வெல்வது மிகவும் கடினமாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இதை நாங்க கொஞ்சம் கூட எதிர்பாக்கல.. இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்த பிறகு பேசிய – டாம் லேதம்
மேலும் ஷமி ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்காதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறுவதற்கு 90% வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகிறது. அதையும் தாண்டி இந்தியா மேஜிக் நிகழ்த்துமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.


