இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி கடைசியாக 2023 உலகக் கோப்பையில் விளையாடினார். அந்த தொடரில் காயத்துடன் அபாரமாக பந்து வீசிய அவர் இந்தியா ஃபைனல் வரை செல்ல முக்கிய பங்காற்றினார். அதன் பின் காயத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் இதுவரை ஒரு வருடமாகியும் இந்தியாவுக்காக மீண்டும் விளையாட வரவில்லை.
இருப்பினும் சமீபத்தில் ஓரளவு குணமடைந்த அவர் மீண்டும் பந்து வீசி பயிற்சிகளை துவங்கியதால் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் தொடரில் விளையாடுவார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார். அந்த நிலையில் பயிற்சி எடுக்கும் போது மீண்டும் முழங்காலில் காயத்தை சந்தித்ததால் ஷமி ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவது சந்தேகம் என்று செய்திகள் வெளி வந்தன. அதை முகமது ஷமி தம்முடைய ட்விட்டரில் மறுத்திருந்தார்.
கம்பேக் எப்போது:
ஆனால் முகமது ஷமி லேசாக காயத்தை சந்தித்தது உண்மை தான் என்று நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் கேப்டன் ரோஹித் சர்மா உறுதிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் 100% வலி குறைந்துள்ளதாக தெரிவிக்கும் ஷமி சில ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் விளையாடி விட்டு இந்தியாவுக்காக கம்பேக் கொடுக்க உள்ளதாக கூறியுள்ளார். எனவே ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவேன் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஷமி பேசியது பின்வருமாறு. “முடிவு நன்றாக இருக்கிறது. 100% வலி இல்லாமல் இருக்கிறேன். அனைவரும் ஏன் எனக்கு குணமடைய இவ்வளவு காலம் தேவைப்படுகிறது? என்றும் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவேனா? என்றும் நினைக்கிறார்கள். ஆனால் இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கிறது. எப்படி முழுமையாக ஃபிட்டாகி ஆஸ்திரேலியாவில் வலுவாக விளையாட முடியும் என்பதே என்னுடைய மனதில் இருக்கிறது”
ஆஸ்திரேலிய தொடர்:
“ஆஸ்திரேலியாவில் நமக்கு எம்மாதிரியான அட்டாக் வேண்டும் என்பதை பார்க்கிறேன். அதற்காக களத்தில் தற்போது நிறைய நேரங்களில் செலவிட்டு வருகிறேன். அதற்கு முன்பாக சில ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் விளையாட விரும்புகிறேன்” என்று கூறினார். அந்த வகையில் ஷமி பயிற்சி எடுக்கும் புதிய வீடியோவும் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலிய தொடருக்காக ருதுராஜ் தலைமையில் இந்தியா ஏ அணி அறிவிப்பு.. 2 தமிழக வீரர்கள் தேர்வு
தற்போது இந்தியாவில் 2024 ரஞ்சிக் கோப்பை போட்டிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் பெங்கால் அணிக்காக சில போட்டிகளில் விளையாடி விட்டு கண்டிப்பாக ஷமி இந்திய அணியில் விளையாடுவதற்கு முழு தகுதியுடன் வருவதற்கு தயாராகி வருகிறார். அதனால் ஆஸ்திரேலிய தொடரில் அவர் கண்டிப்பாக இந்தியாவுக்காக விளையாடுவார் என்று ரசிகர்கள் நம்பலாம்.



