நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று பின்தங்கியுள்ளது. அதனால் நியூஸிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 36 வருடங்கள் கழித்து இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்தது.
முன்னதாக அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரோகித் சர்மா மழையால் வேகத்துக்கு சாதகமாக மாறிய பிட்ச்சில் முதலில் பேட்டிங் செய்தது தோல்விக்கு முக்கிய காரணமானது. ஏனெனில் முதல் இன்னிங்சில் 36க்கு ஆல் அவுட்டான இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது. அதனால் இரண்டாவது இன்னிங்ஸில் 462 ரன்கள் குவித்துப் போராடியும் இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை.
ரோஹித்தின் பெரிய மனசு:
இறுதியில் தாம் பிட்ச்சை தவறாகப் படித்ததே தோல்விக்கு காரணம் என்று ரோஹித் சர்மா ஒப்புக்கொண்டார். இந்நிலையில் அப்படி தவறை ஒப்புக் கொள்வதற்கு பெரிய மனது வேண்டும் என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார். மேலும் சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடி இத்தொடரை இந்தியா கண்டிப்பாக வெல்லும் என்று ஷமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் தவறு செய்துள்ளீர்கள் என்பதை ஒப்பு கொள்வது பெரிய விஷயம். ஆனால் அது தவறு என்று நான் நினைக்கவில்லை. ரோகித் சர்மா நல்ல மனிதாபிமானம் கொண்டவர். யார் வேண்டுமானாலும் தவறு செய்யக்கூடும். ரோஹித் சர்மா அதை பொறுப்புடன் எடுத்துக் கொண்டது பெரிய விஷயம். பொதுவாக வருடத்தில் ஒரு மோசமான போட்டி இருக்கும் என்று சொல்வார்கள்”
ஷமி நம்பிக்கை:
“அதுவே இந்தப் போட்டி என்று நான் நினைக்கிறேன். இங்கிருந்து இந்தியா கண்டிப்பாக கம்பேக் கொடுக்கும் என்று நான் நம்புகிறேன். சொந்த மண்ணில் விளையாடுவது நமக்கு சாதகம். இந்தியா இத்தொடரை வெல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதற்கு இந்தியா தங்களுடைய திட்டங்களையும் திறனையும் கச்சிதமாக செயல்படுத்த வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: மோதி பாக்கலாமா விராட் கோலி? அந்த ஈகோவை டச் பண்ண ரெடியா இருக்கேன் வாங்க.. லபுஸ்ஷேன் சவால்
அவர் கூறுவது போல கடந்த காலங்களில் இப்படி முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தும் கடைசியில் இந்தியா நிறைய தருணங்களில் தொடர்களை வென்றுள்ளது. அதே போல இந்தத் தொடரிலும் இந்தியா போராடி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். இதையடுத்து இத்தொடரின் இரண்டாவது போட்டி அக்டோபர் 24ஆம் தேதி புனேவில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



