வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டி அக்டோபர் 21ஆம் தேதி தலைநகர் தாக்காவில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசத்துக்கு சாத்மன் இஸ்லாம் 0, மோனிமுல் ஹைக் 4, கேப்டன் சாண்டோ 7 ரன்களில் வியன் முல்தார் வேகத்தில் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த முஸ்பிக்கர் ரஹீமை 11 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கிய ரபாடா அடுத்ததாக வந்த லிட்டன் தாஸை 1 ரன்களில் பெவிலியன் அனுப்பினார். அதனால் 45-5 என ஆரம்பத்திலேயே வங்கதேசம் திணறியது.
ரபாடா மிரட்டல்:
அதனால் 100 ரன்கள் தாண்டுமா என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணிக்கு மறுபுறம் துவக்க வீரர் ஹசன் ஜாய் போராடி 30 ரன்களில் அவுட்டானார். இறுதியில் மெகதி ஹசன் 13, தைஜூல் இஸ்லாம் 16 ரன்கள் எடுத்தும் வங்கதேசத்தை வெறும் 106 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா சுருட்டி வீசியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக வியன் முல்தார், காகிஸோ ரபாடா, கேசவ் மகாராஜ் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இந்த 3 விக்கெட்டுகளையும் சேர்த்து தென்னாப்பிரிக்க வீரர் ரபாடா 65 போட்டிகளிலேயே 302 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அத்துடன் 29 வருடம் 150 நாட்களில் அவர் 300 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் 300 விக்கெட்டுகள் எடுத்த தென்னாபிரிக்க வீரர் என்ற டேல் ஸ்டைன் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
உலக சாதனை:
இதற்கு முன் டேல் ஸ்டைன் 29 வருடம் 189 நாட்களில் 300 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை. மேலும் இந்த 300 விக்கெட்களை ரபாடா 11817 ரன்களை எடுத்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 12000க்கும் குறைவான பந்துகளில் 300 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானால் முடியும் போது இந்தியாவால் முடியாதா? ஆஸிக்கு முன் பும்ரா பிரச்சனையை சரி பண்ணுங்க.. பசித் அலி
அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துகள் அடிப்படையில் வேகமாக 300 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற பாகிஸ்தான் ஜாம்பவான் வக்கார் யூனிஸ் சாதனையை உடைத்துள்ள ரபாடா புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ககிஸோ ரபாடா: 11817
2. வக்கார் யூனிஸ்: 12602
3. டேல் ஸ்டைன்: 12605
4. ஆலன் டொனாலட்: 13762
5. மல்கோம் மார்சல்: 13728



