நியூஸிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 36 வருடங்கள் கழித்து ஒரு போட்டியில் வென்று நியூசிலாந்து சாதனை படைத்தது. மறுபுறம் போராடி தோற்ற இந்தியா தொடரை வெல்ல கடைசி 2 போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக அந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஃபீல்டிங் செய்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காயத்தை சந்தித்தார். குறிப்பாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட அதை முழங்காலில் காயத்தை சந்தித்ததால் மேற்கொண்டு அவர் பேட்டிங் செய்ய மாட்டார். என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவுக்காக காயத்தையும் தாண்டி விளையாடிய அவர் 99 ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடினார்.
ரிஷப் பண்ட் காயம்:
இருப்பினும் இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட்க்கு பதிலாக துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். இந்நிலையில் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடுங்கள் என்று சொன்னாலும் ரிஷப் பண்ட் மட்டும் அதைக் கேட்காமல் தம்முடைய அதிரடி ஸ்டைலில் விளையாடும் பேட்ஸ்மேன் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். மேலும் இரண்டாவது போட்டியில் அவர் விளையாடுவார் என்று நம்பிக்கை தெரிவிக்கும் ரோஹித் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“அவர் தன்னுடைய முழங்காலில் பெரிய அறுவை சிகிச்சை மேற்கொண்டார் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே அவருடைய விஷயத்தில் நாங்கள் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும். அவர் எப்படி இருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். பேட்டிங் செய்யும் போது அவர் சௌகரியத்துடன் ஓட முடியாமல் தடுமாறினார். அதனாலேயே அவர் பந்தை மைதானத்திற்கு வெளியே அடிப்பதற்கு முயற்சித்தார்”
ரோஹித் நம்பிக்கை:
“அவரைப் போன்றவர் மீது நாங்கள் அதிகமான கவனம் செலுத்த வேண்டும். உண்மையில் முழங்காலில் பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் கடின காலத்தை கடந்து வந்தார். எனவே நாங்கள் அவரிடம் கொஞ்சம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். கீப்பிங் செய்யும் போது ஒவ்வொரு பந்துக்கும் நீங்கள் உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும்”
இதையும் படிங்க: 3 மணி நேரம் தான்.. கவலைப்படாதீங்க 6 மாசத்துக்கு முன்னாடி செஞ்சதை நியூஸிலாந்துக்கு செய்வோம்.. ரோஹித் உறுதி
“அதனாலேயே அவரை கீப்பிங் செய்ய அனுப்பாமல் அடுத்த போட்டிக்கு தயாராக உதவலாம் என்று நாங்கள் முடிவெடுத்தோம். தயவு செய்து சூழ்நிலையை உணர்ந்து விளையாடுங்கள் என்பது போல் நாங்கள் அவரிடம் பேசுவோம். ஆனால் ரிஷப் பண்ட் அவருடைய ஸ்டைலில் விளையாடவே விரும்புகிறார். அது போன்ற மனநிலையில் அவர் வெற்றிகரமான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். எனவே அவர் சுதந்திரமாக விளையாடுவதற்கு நாங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.



