நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இருப்பினும் அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது அசாத்தியமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூருவில் மழையால் தாமதமாக துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதனால் சொந்த மண்ணில் குறைந்தபட்ச டெஸ்ட் ஸ்கோர் பதிவு செய்து இந்தியா மோசமான சாதனை படைத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் விளையாடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 402 ரன்கள் குவித்து அசத்தியது.
இந்தியா போராட்டம்:
அதிகபட்சமாக டேவோன் கான்வே 91, ரச்சின் ரவீந்திரா சதமடித்து 134, டிம் சௌதீ 65 ரன்கள் எடுத்தனர். இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பின் 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடும் இந்தியா மூன்றாவது நாள் முடிவில் 231-3 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 35, கேப்டன் ரோஹித் சர்மா 52 ரன்கள் எடுத்து போராடி அவுட்டானார்கள்.
அதைத் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய விராட் கோலி 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த நிலையில் களத்தில் ரன்களுடன் சர்பராஸ் கான் 70* ரன்களுடன் விளையாடுகிறார். தற்சமயத்தில் நியூசிலாந்தை விட 125 ரன்கள் பின்தங்கியிருக்கும் இந்தியாவிடம் 7 விக்கெட் மட்டுமே கைவசம் உள்ளது. அதனால் இந்தப் போட்டியில் தற்போதைய நிலவரப்படி இந்தியா டிரா செய்வதற்கே இன்னும் போராட வேண்டியுள்ளது.
இந்தியா கம்பேக் கொடுக்குமா:
அதனால் வெற்றி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணி போராடும் விதத்தைப் பார்த்து தாம் நியூசிலாந்து அணியில் இருந்தால் கவலைப்படுவேன் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார். மேலும் 3 மாதத்திற்கு முன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஃபைனலில் 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்ட போது இந்தியா தோற்கும் என்று நினைத்ததாக அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விராட் கோலி தண்டனை கொடுத்துட்டாரு.. அப்பா முன்னாடி இதை செஞ்சது ஸ்பெஷல்.. ரவீந்திரா பேட்டி
ஆனால் அப்போது இந்தியா போராடி வென்றது போல் இப்போட்டியில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக மறைமுகமாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஒருவேளை நான் நியூசிலாந்து அணியில் இருந்தால் இந்திய அணியின் பதிலடியைப் பார்த்து கொஞ்சம் கவலையாக இருப்பேன். ஏனெனில் இந்த இந்திய அணி கம்பேக் கொடுப்பதில் சிறந்த சாமர்த்தியத்தை கொண்டுள்ளது. சமீபத்தில் தான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 30 பந்துகளில் 30 ரன்கள் என்ற நிலையிலிருந்து கம்பேக் கொடுத்தது நினைவிருக்கிறதா?” என்று கூறியுள்ளார்.



