வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் டெஸ்ட் தொடரைப் போலவே டி20 தொடரிலும் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. முன்னதாக குவாலியரில் அக்டோபர் ஆறாம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சுமார் 3 வருடங்கள் கழித்து மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார்.
அந்த வாய்ப்பில் 4 ஓவர்களை வீசிய அவர் 31 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது சிறந்த பவுலிங் பதிவு செய்தார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக அசத்தியதால் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் 2021 டி20 உலகக் கோப்பை உட்பட தனது முதல் 6 போட்டிகளில் 2 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார்.
கம்பேக் போராட்டம்:
அதனால் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட அவர் மீண்டும் கொல்கத்தா அணியில் தொடர்ந்து போராடினார். அந்த வாய்ப்பில் 2024 சீசனில் சிறப்பாக பந்து வீசிய அவர் கொல்கத்தா 3வது கோப்பையை வெல்ல உதவினார். அதன் காரணமாக கௌதம் கம்பீர் ஆதரவுடன் மீண்டும் இந்திய அணிகள் கம்பேக் கொடுத்துள்ள அவர் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுப்பதற்காக தன்னுடைய பந்து வீச்சில் 2 வருடங்களாக பெரிய மாற்றம் செய்ததாக வருண் சக்கரவர்த்தி கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆரம்பக் காலங்களில் நான் சைட் ஸ்பின் பவுலராக இருந்தேன். ஆனால் தற்போது நான் முற்றிலுமாக ஓவர் ஸ்பின் பவுலராக மாறியுள்ளேன். அது சுழல் பந்து வீச்சின் டெக்னிக்கில் செய்யக்கூடிய ஒரு நிமிட விஷயம்”
ஆரோக்கியமான போட்டி:
“ஆனால் அதைச் செய்வதற்கு எனக்கு 2 வருடங்கள் தேவைப்பட்டது. அதை நான் முதலில் டிஎன்பிஎல் மற்றும் ஐபிஎல் தொடரில் சோதித்தேன். அதற்காக மனதளவிலும் வேலை செய்ய வேண்டியிருந்தது. இருப்பினும் என்னுடைய முதல் முயற்சியை டெக்னிக்கல் பக்கத்தில் போட்டேன். சமீபத்திய வருடங்களில் இந்திய அணியை பார்க்கும் போது அதில் எனது பெயர் ஏன் இல்லை என்று நினைப்பேன். எனது குடும்பத்தினரும் ஏமாற்றத்தை சந்தித்தனர்”
இதையும் படிங்க: 139 சிக்ஸ்.. பட்லரை முந்தி சூரியகுமார் சாதனை.. விராட் கோலியை மிஞ்சிய பாண்டியா.. இந்தியாவின் ஃபினிஷராக சாதனை
“ஆனால் இதை விடக்கூடாது என்ற நோக்கத்துடன் நிறைய உள்ளூர் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளையாடினேன். அது எனக்கு உதவியது. இந்திய அணியில் ஆரோக்கியமான போட்டி இருக்கிறது. ரவி பிஸ்னோய் இங்கே எனக்கு உற்சாகத்தை கொடுக்கிறார். அவரும் எனக்கு சில மெசேஜ்களை கொடுத்தார். இது போன்ற போட்டி இருந்தால் தான் ஒருவரை ஒருவர் முந்தி நன்றாக செயல்பட முடியும். அதில் யாரோ ஒருவர் இந்தியாவுக்காக கோப்பையை வென்று கொடுப்பார்” என்று கூறினார்.



