இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி கான்பூரில் துவங்கியது. 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் வங்கதேசத்தை 280 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா முன்னிலை பெற்றது. அந்த நிலையில் துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
மழையால் தாமதமாக துவங்கிய அந்தப் போட்டி மீண்டும் மழை பெய்ததால் முதல் நாளில் சீக்கிரமாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. முதல் நாள் முடிவில் 107-3 ரன்கள் எடுத்துள்ள வங்கதேசத்திற்கு களத்தில் மோனிமுல் ஹைக் 40*, ரஹீம் 6* ரன்களுடன் உள்ளனர். சாத்மன் இஸ்லாம் 24, ஜாகிர் ஹசன் 0, கேப்டன் சாண்டோ 40 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
குரங்குகளின் அட்டகாசம்:
முன்னதாக இப்போட்டி உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் நகரில் இருக்கும் கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அந்த மைதானத்தை சுற்றிய பகுதிகளில் அதிகமாக குரங்குகள் இருக்கின்றன. அந்த சூழ்நிலையில் இப்போட்டியை படம் பிடிப்பதற்காக ஒளிபரப்புக் குழுவினர் மைதானத்தின் ஒரு பகுதியில் உயரமான கோபுரங்கள் அமைத்துள்ளார்கள்.
அதிலிருந்து தான் அவர்கள் போட்டியை நேரலையில் படம் படம் பிடிக்கிறார்கள். ஆனால் அந்த உயரமான கோபுரத்திற்கு சென்ற குரங்குகள் கேமராமேன்கள் சாப்பிடுவதற்காக வைத்திருந்த உணவையும் குளிர்பானங்களையும் தாங்கள் சாப்பிடுவதற்காக திருடிச் சென்றுள்ளன. அதை அவர்கள் விரட்ட முயற்சித்தும் மீண்டும் மீண்டும் குரங்குகள் வந்து அட்டகாசம் செய்துள்ளன.
வினோத முடிவு:
அதனால் ஒளிபரப்பு குழுவினர் மைதான நிர்வாகத்திடம் புகார் செய்துள்ளனர். அதை தொடர்ந்து குரங்குகளின் சேட்டையை தடுப்பதற்காக லாங்குர் எனப்படும் இனத்தை சேர்ந்த சில குரங்குகளை காவலுக்கு வைக்க முடிவெடுத்துள்ளதாக கான்பூர் மைதான இயக்குனர் சஞ்சய் கபூர் அறிவித்துள்ளார். அதாவது லாங்குர் இனத்தைச் சேர்ந்த குரங்குகளுக்கு சில உள்ளூர் வாசிகள் பிரத்தியேக பயிற்சிகளை கொடுத்து மற்ற குரங்குகளின் சேட்டைகளை தடுப்பதற்காக வளர்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இதை செய்ஞ்சு காட்டனும்னு தான் பண்ணேன் – யுஸ்வேந்திர சாஹல்
அந்த லாங்குர் இனக் குரங்குகளை தற்போது கான்பூர் போட்டியில் மற்ற குரங்குகளின் சேட்டைகளை தடுப்பதற்காக மைதான நிர்வாகம் போட்டி முடியும் வரை வாடகைக்கு வாங்கியுள்ளது. சொல்லப்போனால் கான்பூரில் கடைசியாக நடைபெற்ற 2 சர்வதேச போட்டிகளிலும் குரங்குகளின் சேட்டையை தடுக்க மைதான நிர்வாகம் இதே செயலை செய்திருந்தது. மொத்தத்தில் இந்தியா விளையாடும் சர்வதேச போட்டியில் குரங்குகள் இப்படி சேட்டை செய்தது ரசிகர்களை சிரிக்க வைப்பதாக அமைகிறது.



