இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொத்தம் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதில் நிறைய வெற்றிகளை பெற்றால் ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறும். எனவே அந்த வெற்றிப் பயணத்தை செப்டம்பர் 19ஆம் தேதி சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிரான தொடரிலிருந்து இந்தியா துவக்குகிறது.
இந்நிலையில் முன்பெல்லாம் இந்திய கிரிக்கெட்டில் பெரும்பாலும் பேட்ஸ்மேன்கள் தான் ரசிகர்களால் கொண்டாடப்பட்டதாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த நிலைமையை தற்போது பும்ரா, அஸ்வின், ஜடேஜா போன்ற பவுலர்கள் தொடர்ச்சியாக பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை பெற்றுக் கொடுத்து இந்திய கிரிக்கெட்டை மாற்றியுள்ளதாக கம்பீர் பாராட்டியுள்ளார்.
மாறிய இந்திய வரலாறு:
இது பற்றி முதல் வங்கதேச டெஸ்ட் போட்டிக்கு முன் அவர் பேசியது பின்வருமாறு. “இதற்கான பாராட்டுகளை நீங்கள் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு கொடுக்க வேண்டும். அவர்கள் இந்த நாட்டை பவுலிங்கை விரும்பும் நாடாக மாற்றியுள்ளனர். பும்ரா உலகின் சிறந்த பவுலர்”
“செயல்பாடுகளில் மட்டுமல்ல விளையாட்டின் மீதான பசியிலும் அவர் சிறந்து விளங்குகிறார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் விளையாட விரும்புவதே சிறந்த விஷயமாகும். பொதுவாக டெஸ்ட் போட்டிகள் எப்போதும் வசதியாக இருக்காது. அதில் பும்ரா போட்டியின் எந்த நேரத்திலும் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறார். இந்தத் தொடரிலும் அவர் அதை செய்வார் என்பதை எதிர்பார்த்து நோக்கியுள்ளேன்”
ஹீரோவாக பவுலர்கள்:
“நமது பவுலர்கள் முதல் நாள் அல்லது 5வது நாள் உட்பட அனைத்து நேரங்களிலும் விக்கெட்டுகளை எடுப்பார்கள். அவர்களால் தடுப்பாட்டம் மற்றும் அட்டாக் செய்யும் வகையில் பந்து வீச முடியும். தொடர்ச்சியாக 20 விக்கெட்டுகளை எடுக்கும் அளவுக்கு எங்களிடம் அட்டாக் இருக்கிறது. குறிப்பாக அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் இந்திய மைதானங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்”
இதையும் படிங்க: 36/7 டூ 106 ஆல் அவுட்.. தென்னாப்பிரிக்காவை தெறிக்க விட்ட ஆப்கானிஸ்தான்.. இரட்டை சரித்திர சாதனை வெற்றி
“எங்களிடம் வேண்டுமானால் கபில் தேவ் போன்ற வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இல்லாமல் இருக்கலாம். இருப்பினும் இந்திய கிரிக்கெட்டின் அடிப்படை மிகவும் வலுவானது. எனவே வருங்காலத்தில் அது போன்ற ஒருவர் வளர்வதை பார்க்க முடியும். அதற்காக இப்போது நாங்கள் அதைப் பற்றி அதிகமாக கவலைப்படவில்லை” என்று கூறினார். அந்த வகையில் இப்போதெல்லாம் 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனல் உட்பட பவுலர்களும் இந்தியாவின் வெற்றி நாயகர்களாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



