இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்துக்கு எதிராக விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்குகிறது. சென்னையில் துவங்கும் அந்தத் தொடரில் வென்று 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற இந்தியா தயாராகியுள்ளது. ஆனால் மறுபுறம் சமீபத்தில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியதை போல இந்தியாவையும் தோற்கடிப்போம் என்று வங்கதேச அணியினர் சவால் விட்டு வருகின்றனர்.
குறிப்பாக பாகிஸ்தானை வீழ்த்தியதால் கிடைத்த எக்ஸ்ட்ரா தன்னம்பிக்கையை பயன்படுத்தி இந்தியாவிலும் வெல்வோம் என்று வங்கதேச கேப்டன் நஜ்முல் சாண்டோ சவால் விடுத்தார். அதே போல வங்கதேச வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல ஃபார்மில் இருப்பதாக அந்நாட்டின் சோரிபுல் இஸ்லாம் கூறினார். எனவே இந்தியாவையும் வீழ்த்த முடியும் நம்பிக்கை தங்களுக்கு உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
வாழ்த்துக்கள் வங்கதேசம்:
இந்நிலையில் பாகிஸ்தானில் வென்றதற்காக வங்கதேசத்தை வாழ்த்தி மதிப்பதாக இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்காக இந்திய அணி யாருக்கும் பயப்படாது என்று கம்பீர் அதிரடியாக பேசியுள்ளார். மேலும் அந்த பழைய தொடரைப் பற்றி பேசாமல் இந்த புதிய தொடரில் சிறப்பாக விளையாடி இந்தியா வெல்லும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி முதல் போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் யாருக்காகவும் பயப்படக்கூடாது என்று நான் உறுதியாக நம்புபவன். அதே சமயம் நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம். வங்கதேசத்திற்கும் அதையே செய்கிறோம். நாங்கள் எதிரணியை பற்றி பார்ப்பதில்லை. எங்களுக்கு தெரிந்த கிரிக்கெட்டை விளையாட உள்ளோம்”
இந்தியா பயப்படாது:
“பாகிஸ்தானில் என்ன செய்தார்கள் என்பதற்காக வங்கதேசத்திற்கு நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். ஆனால் இது புதிய தொடர். வங்கதேசம் தரமான அணி. நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். ஆம் வங்கதேசத்திடம் ஷாகிப், ரஹீம், மெஹதி ஹசன் போன்ற அனுபவமான வீரர்கள் உள்ளனர். அனல் நாங்கள் முதல் பந்திலிருந்தே மாற்றி விளையாடுவோம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ
முன்னதாக கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்து அணியும் இப்படி இந்தியாவுக்கு சவால் விட்டதாக ரோஹித் சர்மா நேற்று தெரிவித்திருந்தார். ஆனால் இந்திய அணி போட்டியில் மட்டும் கவனத்தை செலுத்தி கடைசியில் 4 – 1 (5) என்ற கணக்கில் வென்றதாக ரோஹித் கூறியிருந்தார். எனவே இந்தியாவை வீழ்த்த நினைக்கும் வங்கதேசத்தை ஜாலியாக இருக்க விடுங்கள் என்று ரோஹித் சர்மா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



