துலீப் கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2வது ரவுண்ட் போட்டிகள் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி அனந்தபூரில் துவங்கின. அதில் இந்தியா பி மற்றும் இந்தியா சி அணிகள் 4வது போட்டியில் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா சி அணி அபாரமாக பேட்டிங் செய்து 525 ரன்கள் குவித்து அசத்தியது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக இசான் கிசான் சதமடித்து 111 தமிழக வீரர் பாபா இந்திரஜித் 78 ரன்கள் குவித்தனர். அதே போல காயத்திலிருந்து வந்து மீண்டும் விளையாடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 58, மாணவ் சுதர் 82 ரன்கள் எடுத்தனர். அது போக மற்றொரு தமிழக வீரர் சாய் சுதர்சன் 43, ரஜத் படிடார் 40, அன்சுல் கம்போஜ் 38 ரன்கள் எடுத்தனர். இந்தியா பி சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் மற்றும் ராகுல் சஹர் தலா 4 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
ருதுராஜ் அணி அசத்தல்:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா பி அணிக்கு துவக்க வீரர் மற்றும் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் சதமடித்து 157* ரன்கள் குவித்து சவாலை கொடுத்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய மற்றொரு தமிழக வீரர் நாராயணன் ஜெகதீசன் அரைசதம் அடித்து 70 ரன்கள் குவித்து அசத்தினர். ஆனால் அவர்களை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினர்.
அதனால் இந்தியா பி அணியை 332 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா சி சார்பில் அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் மற்றும் மும்பை ஐபிஎல் அணி வீரர் அன்சுல் கம்போஜ் 27.5 ஓவரில் 69 ரன்கள் கொடுத்தது 8 விக்கெட்டுகள் எடுத்தார். அதன் வாயிலாக துலீப் கோப்பை வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் எடுத்த மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்தார். மேலும் துலீப் கோப்பையில் 23 வருடத்திற்கு பின் 8 விக்கெட்டுகளை எடுத்து 2வது சிறந்த பவுலிங்கை பதிவு செய்த வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
முதலிடம் வாய்ப்பு:
இதற்கு முன் 2001 துலீப் கோப்பையில் டெபாசிஸ் மோகன்ட்டி 10-46 எடுத்ததே முந்தைய சாதனையாகும். இறுதியில் 192 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா சி 128-4 ரன்கள் எடுத்திருந்த போது போட்டி டிராவில் முடிந்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் 62, ரஜத் படிடார் 42 ரன்கள் எடுத்தனர். ஆனால் இப்போட்டியில் 192 ரன்கள் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதால் இந்தியா சி அணி 3 புள்ளிகளை பெற்றது. இந்தியா பி அணி 1 புள்ளி மட்டுமே பெற்றது.
இதையும் படிங்க: 186 ரன்ஸ்.. படுதோல்வியால் மூட்டை கட்டிய ஷ்ரேயாஸ் அணி.. 1 கோப்பைக்கு 3 அணிகள் போட்டி.. வெல்லப்போவது யார்?
மேலும் ஏற்கனவே தங்களது முதல் ரவுண்ட் போட்டியில் வென்றதால் மொத்தம் 9 புள்ளிகளுடன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தியா பி, சி அணிகள் 7, 6 புள்ளிகளுடன் 2, 3வது இடங்களில் உள்ளன. அதனால் தங்களுடைய கடைசிப் போட்டியில் வென்றால் 2024 துலீப் கோப்பையை இந்தியா சி அணி வெல்லும் என்பது குறிப்பிடப்பட்டது.



