இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தங்களுடைய சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் துவங்குகிறது. அந்தத் தொடரில் பாகிஸ்தானை தோற்கடித்த உத்வேகத்துடன் இந்தியாவை வீழ்த்துவோம் என்று வங்கதேச அணியினர் சவால் விடுத்து வருகின்றனர்.
ஆனால் 2012க்குப்பின் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட உலகின் எந்த அணிக்கு எதிராகவும் இந்தியா சொந்த மண்ணில் தோற்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது. எனவே வங்கதேசத்தையும் வீழ்த்தி இந்தியா அத்தொடரை வெல்லும் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அந்தத் தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இந்த வருடம் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்க உள்ளார்.
58 ரன்கள்:
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொந்த காரணங்களுக்காக அவர் விளையாடவில்லை. அதன் பின் 2024 டி20 உலகக் கோப்பையில் லீக் சுற்றில் தடுமாறினாலும் ஃபைனலில் அசத்திய விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்று இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். ஆனால் அதன் பின் நடைபெற்ற இலங்கை ஒருநாள் தொடரில் அவர் சுமாராக விளையாடினார்.
எனவே மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வங்கதேச தொடரில் விராட் கோலி பெரிய ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வங்கதேச தொடரில் விராட் கோலி இன்னும் 58 ரன்கள் குவிக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைப்பார்.
சச்சினின் சாதனை:
கடந்த 2008 முதல் விளையாடி வரும் விராட் கோலி இதுவரை 113 டெஸ்ட், 295 ஒருநாள், 125 டி20 போட்டிகளில் 591 இன்னிங்ஸில் மொத்தம் 26942 ரன்கள் குவித்துள்ளார். எனவே இன்னும் 58 ரன்கள் அடித்தால் சச்சினை முந்தி விராட் கோலி அந்த சாதனையை உடைப்பார். சொல்லப்போனால் ஏற்கனவே அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 16000, 17000, 18000, 19000, 20000, 21000, 22000, 23000, 24000, 25000, 26000 ரன்கள் அடித்த வீரராக சச்சினை முந்தி உலக சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிங்க: ரோஹித் சர்மாவை மும்பை அணி கழட்டி விடும்.. ஆனா அந்த வீரரை மட்டும் விடவே விடாது – ஆகாஷ் சோப்ரா கருத்து
மேலும் சச்சின் டெண்டுல்கர் (34357), குமார் சங்கக்காரா (28017), ரிக்கி பாண்டிங் (27483) ஆகியோருக்கு பின் 27000 ரன்கள் குவித்த 4வது வீரர் என்ற பெருமையும் விராட் கோலி பெறுவார். அதே போல வங்கதேச தொடரில் இன்னும் 152 ரன்கள் அடித்தால் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோருக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்கள் குவித்த 4வது இந்திய வீரர் என்ற சாதனையும் விராட் கோலி படைப்பார்.



