இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை 146 போட்டிகளில் 12402 ரன்களை குவித்துள்ள அவர் 34 சதங்களையும் அடித்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் சமீபத்தில் அவர் படைத்திருந்தார்.
தற்போது 33 வயது மட்டுமே நிரம்பியுள்ள ஜோ ரூட் இன்னும் 4 வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது போன்ற சூழ்நிலையில் இன்னும் 3000 – 4000 ரன்கள் குவிப்பார் என்று நம்பப்படுகிறது. அதனால் 15921 ரன்கள் குவித்துள்ள சச்சின் டெண்டுல்கரை முந்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஜோ ரூட் சாதனை படைப்பார் என்ற பேச்சுக்கள் உருவாகியுள்ளது.
ஜோ ரூட்டுக்கு எச்சரிக்கை:
இந்நிலையில் 2025 ஜூன் மாதம் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதே போல 2025 இறுதியில் ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து ஆஷஸ் கோப்பையில் விளையாட உள்ளது. அந்தத் தொடர்களில் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் பட் கமின்ஸ் ஆகியோர் ஜோ ரூட்டை தெறிக்க விடலாம் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் எச்சரித்துள்ளார்.
குறிப்பாக ஜோ ரூட்டுக்கு எதிராக இந்தியாவின் பும்ரா மிகவும் மகிழ்ச்சியுடன் பந்து வீசுவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். எனவே இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியை போல தடுமாறாமல் ஜோ ரூட் முன்னேற வேண்டும் என்று தெரிவிக்கும் வாகன் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஜோ ரூட் இங்கிலாந்து பேட்டிங்கின் முக்கியமான சாவி என்பதை இந்த வாரம் எனக்கு காண்பித்தது”
அச்சுறுத்தும் ஜஸ்ப்ரித் பும்ரா:
“மற்ற இங்கிலாந்து வீரர்கள் அவரைச் சுற்றி அரை சதங்கள் அடிக்கின்றனர். ஆனால் நம்பர் 4வது இடத்தில் விளையாடும் ஜோ ரூட் பெரிய ரன்கள் எடுக்கவில்லை என்றால் அவர்கள் தடுமாறுகின்றனர். ஜோ ரூட் இதை ஒவ்வொரு வாரமும் செய்ய முடியாது. ரூட்டுக்கு எதிராக ஜஸ்ப்ரித் பும்ரா பந்து வீசுவதை மகிழ்ச்சியாக செய்கிறார்”
இதையும் படிங்க: என்னையா டீம்ல சேக்க மாட்ரீங்க.. இங்கிலாந்து சென்று சம்பவம் செய்த யுஸ்வேந்திர சாஹல் – என்ன நடந்தது?
“அவர் அடுத்த கோடைகாலத்தில் ரூட் ரன்கள் அடிக்கும் உற்பத்தியை குறைக்கலாம். இதே கதை ஜோ ரூட் இதுவரை சதமடிக்காத ஆஸ்திரேலியாவில் பட் கமின்ஸ்க்கும் பொருந்தும். எனவே ரூட் பெரிய ரன்கள் எடுக்காத போது இங்கிலாந்து வெற்றிக்கான வழியை கண்டறிய வேண்டும். அடிப்படையில் அவர்கள் அதைக் கொண்டிருக்கவில்லை” என்று கூறினார். முன்னதாக ஏற்கனவே ஜோ ரூட்டை 9 முறை பும்ரா அவுட்டாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



