இந்திய கிரிக்கெட் அணியில் தற்சமயத்தில் சுப்மன் கில்லுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் ருதுராஜ் கெய்க்வாட்க்கு கிடைக்காதது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில்லை விட ருதுராஜ் கெய்க்வாட் இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடி நல்ல ரெக்கார்டை வைத்துள்ளார். இருப்பினும் சமீபத்திய இலங்கை டி20 தொடரில் அவரை கழற்றி விட்ட தேர்வுக்குழு சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுத்தது.
சொல்லப்போனால் சுப்மன் கில்லை ஆல் ஃபார்மட் பிளேயராக பார்ப்பதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் சமீபத்தில் கூறினார். அதனாலேயே அவரை துணை கேப்டனாக நியமித்துள்ளதாகவும் அகர்கர் கூறியிருந்தார். ஆனால் 2024 ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி சுமாராக விளையாடி புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தையே பிடித்தது.
ருதுராஜ் கெய்க்வாட் வாய்ப்பில்லை:
மறுபுறம் ஜாம்பவான் தோனியின் நம்பிக்கையை பெற்ற ருதுராஜ் தலைமையில் விளையாடிய சிஎஸ்கே ஐந்தாவது இடத்தை பிடித்தது. அதற்கு முன்பாக ருதுராஜ் தலைமையில் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. அப்படியிருந்தும் ருதுராஜ்க்கு சாதாரண வீரராக கூட இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் இதற்கான காரணம் பற்றி முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா சமீபத்திய பேட்டியில் தெரிவித்தது பின்வருமாறு.
“ருதுராஜ்க்கு தற்போது ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது. உண்மையில் நேராக டிரைவ் அடித்து கட், புல் ஷாட்டுகளை அடிக்கும் அவருடைய பேட்டிங் டெக்னிக்கல் அளவில் நாட்டு நெய் போல நன்றாக இருக்கிறது. ஆனால் தற்சமயத்தில் ருதுராஜ்க்கு நடப்பதை பாருங்கள். அடுத்த ஒன்றரை வருடங்கள் அவருக்கு தவறான காலங்கள் இருக்கிறது. ஆனால் பந்தயத்தில் சுப்மன் கில் முன்னோக்கி சென்று விட்டார்”
கில் எங்கயோ போய்ட்டாரு:
“இந்திய கிரிக்கெட்டைச் சேர்ந்த பயிற்சியாளர் அல்லது தேர்வாளர்கள் போன்ற அனைவரும் அவரை அடுத்த கேப்டன் மற்றும் சூப்பர்ஸ்டாராக கருதுகின்றனர். உண்மையில் இந்திய அணியில் நிறைய இடங்கள் இல்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் ரோஹித்தை தொடர்ந்து கில் இருக்கிறார். 4வது இடத்தில் விராட் கோலி பின்னர் ரிசப் பண்ட், கேஎல் ராகுல் ஆகியோர் விளையாடுகின்றனர்”
இதையும் படிங்க: சிஎஸ்கே தோனி மாதிரி கிடையாது.. மும்பை ரோஹித் சர்மாவுக்கு இதை செய்யாது.. ஆகாஷ் சோப்ரா பேட்டி
“இந்தியா அதிகப்படியான ஒருநாள் கிரிக்கெட்டிலும் விளையாடுவதில்லை. எனவே ருதுராஜ் காத்திருக்க வேண்டும். அதே சமயம் டி20 கிரிக்கெட்டில் நாம் அதிரடியாக விளையாட விரும்புகிறோம். அது போன்ற சூழ்நிலையில் ருதுராஜ் மட்டுமல்ல சுப்மன் கில் பெயரும் டி20 அணியில் இருக்காது” என்று கூறினார். மொத்தத்தில் வருங்காலங்களில் ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்று தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் மட்டுமே ருதுராஜ்க்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கலாம்.



