வங்கதேசத்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தங்களது சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்கும் அத்தொடர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா வெல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் பாகிஸ்தானை தோற்கடித்த நம்பிக்கையுடன் இந்தியாவையும் வீழ்த்துவோம் என்று வங்கதேச அணியினர் சவால் விடுத்து வருகின்றனர். முன்னதாக அந்தத் தொடரில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இந்த வருடம் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட உள்ளார். ஏனெனில் கடந்த மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சொந்த காரணங்களுக்காக விராட் கோலி விளையாடாமல் விலகினார்.
இரட்டை சதமடிப்பார்:
எனவே பல மாதங்கள் கழித்து மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் விராட் கோலி பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. ஏனெனில் ஃபேப் 4 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகியோரை விட விராட் கோலி மிகவும் பின்தங்கியுள்ளார். இந்நிலையில் வங்கதேச டெஸ்ட் தொடரில் விராட் கோலி இரட்டை சதமடிப்பார் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விராட் கோலி விளையாடவில்லை. கடந்த இலங்கை ஒருநாள் தொடரிலும் அவர் சிறப்பாக செயல்படவில்லை. எனவே அடுத்து நடைபெறும் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் தொடர்களில் விராட் கோலியிடமிருந்து நீங்கள் பெரிய சதங்களை பார்க்க முடியும்”
இந்திய அணி லெவன்:
“அது 110 அல்லது 115 ரன்களாக இருக்காது. 200க்கும் மேற்பட்ட ரன்களை கொண்ட சதமாக இருக்கும்” என்று கூறினார். மேலும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் தம்முடைய தரமான இந்திய லெவன் அணியையும் பசித் அலி தேர்ந்தெடுத்தார். அதில் வங்கதேச அணியில் நிறைய இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அவர் அக்சர் படேலுக்கு பதிலாக குல்தீப் யாதவை தேர்ந்தெடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ஷமி, சிராஜ் மாதிரி 140கி.மீ வேகத்தில் வீசுவாரு.. அந்த பையன் பவுலிங்கை பார்க்க காத்திருக்கேன்.. கங்குலி பேட்டி
2024 வங்கதேச டெஸ்ட் தொடர் முதல் போட்டிக்கான பசித் அலி இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), யசஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்



