ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையில் அணி இந்திய கிரிக்கெட் அணி வென்றது. கடந்த ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அத்தொடரில் இந்தியா தோல்வியே சந்திக்காமல் கோப்பையை வென்றது. குறிப்பாக மாபெரும் இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்றது.
அந்த வெற்றி கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஏனெனில் கடைசியாக 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியா அதன் பின் ஐசிசி தொடர்களில் தொடர்ந்து 10 வருடங்களாக தோல்வியை சந்தித்தது. அந்த தோல்வியை உடைத்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் சரித்திர வெற்றியைப் பெற்று மைதானத்திலேயே ஆனந்தக் கண்ணீருடன் கொண்டாடினர்.
சூரியகுமார் கேட்ச்:
முன்னதாக அத்தொடரின் இறுதிப்போட்டியில் கடைசி 30 பந்துகளில் தென்னாப்பிரிக்காவுக்கு 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் மீண்டும் தோற்கப் போகிறோம் என்று இந்திய ரசிகர்கள் சோகமடைந்தனர். ஆனால் அப்போது அபாரமாக பந்து வீசிய ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்டிக் பாண்டியா ஆகியோர் இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.
குறிப்பாக பாண்டியா வீசிய கடைசி ஓவரின் 16 ரன்கள் தேவைப்பட்ட போது டேவிட் மில்லர் சிக்ஸர் அடித்தார். இருப்பினும் அதை பவுண்டரி எல்லையில் சூரியகுமார் யாதவ் கச்சிதமாக ஓடிப்பிடித்தார். ஆனால் அப்போது பேலன்ஸ் இழந்ததால் களத்திற்குள் பந்தை தூக்கிப்போட்ட அவர் மீண்டும் உள்ளே வந்து கேட்ச் பிடித்தார். அந்த கேட்ச் கடைசியில் இந்தியாவின் வெற்றிக்கு மிகவும் முக்கிய பங்காற்றியது.
ரசிகர்களே காரணம்:
அதனால் சூரியகுமார் பிடித்தது வெறும் கேட்ச் அல்ல உலகக்கோப்பை என்று பலரும் பாராட்டினார்கள். இந்நிலையில் அனைத்துமே முடிந்து விட்டது என்று நினைத்த போது ரசிகர்களின் பிரார்த்தனையால் தான் சூரியகுமார் கேட்ச் பிடித்து இந்தியா வென்றதாக ரிஷப் பண்ட் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: 100மீ சிக்ஸர் அடிச்சப்போ மனதில் விளையாடாதன்னு சொன்னாரு.. தல தோனியின் அட்வைஸ் பற்றி தேஷ்பாண்டே
“பந்து காற்றில் இருந்த போது அனைத்தும் முடிந்து விட்டதாகவே நாங்கள் உணர்ந்தோம். ஏனெனில் பந்து அடிக்கப்பட்ட விதத்தில் அது சிக்ஸர் போல தெரிந்தது. ஆனால் இந்திய ரசிகர்களின் பிரார்த்தனையால் மட்டுமே பந்து பவுண்டரி லைனைத் தாண்டவில்லை. தற்போதைக்கு நான் எதைப் பற்றியும் சிந்திக்கவில்லை. இந்தியாவில் மக்கள் நீங்கள் செய்ததை 10 – 15 நாட்களில் மறந்து விடுவார்கள். எனவே நீங்களும் வெற்றி தோல்விகளை மறக்க வேண்டும். அந்த தருணம் என் நினைவில் இருக்கிறது. ஆனால் நான் அடுத்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.



