இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்கும் அத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொடரில் இந்திய அணியை தோற்கடிப்போம் என்று வங்கதேச அணியினர் தொடர்ச்சியாக நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக சமீபத்தில் பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் 2 – 0 (2) என்ற கணக்கில் வங்கதேசம் வீழ்த்தியது. அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக வென்று வங்கதேசம் வரலாறு படைத்தது. அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிராக 3 வகையான கிரிக்கெட்டிலும் முதல் முறையாக ஒரு தொடரை வென்று வங்கதேசம் சாதனை படைத்தது.
இந்தியாவையும் வீழ்த்துவோம்:
அந்த வெற்றி தங்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுத்துள்ளதாக வங்கதேச கேப்டன் நஜ்முல் சாண்டோ கூறியுள்ளார். எனவே சரியான திட்டங்களை வகுத்து நன்றாக விளையாடினால் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்த முடியும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியா போன்ற வலுவான அணியை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடித்தால் உலகில் அனைவரும் தங்களை திரும்பிப் பார்ப்பார்கள் என்று வங்கதேச வீரர் சோரிஃபுல் இஸ்லாம் கூறியுள்ளார்.
இருப்பினும் பாகிஸ்தானை போல இந்தியாவை எளிதாக வீழ்த்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் சரியான திட்டங்களுடன் கடினமாக பயிற்சிகளை எடுத்து வரும் தாங்கள் இந்தியாவை வீழ்த்துவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி வங்கதேச வாரியம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியது பின்வருமாறு.
உலகமே திரும்பி பார்க்கும்:
“பாகிஸ்தானுடன் ஒப்பிடும் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா மிகவும் அனுபவமிக்க அணியாகும். மிகப்பெரிய அணியான இந்தியாவுக்கு எதிராக நாங்கள் நன்றாக விளையாடினால் எங்களை மொத்த உலகமும் திரும்பிப் பார்க்கும் என்று கருதுகிறேன். எனவே இந்தியாவில் நாங்கள் நன்றாக செயல்பட்டால் அது எங்களை மகிழ்ச்சியடைய வைக்கும்”
இதையும் படிங்க: ஸ்பின்னர்களை அடித்து நொறுக்க அவர் கொடுத்த அட்வைஸ் தான் காரணம்.. ரிஷப் பண்ட் ஓப்பன்டாக்
“அதற்காக நாங்கள் கடினமாக வேலை செய்து வருகிறோம். எனவே வெற்றி முடிவுகளும் எங்களுக்கு சாதகமாக வரும் என்று நம்புகிறோம். பாகிஸ்தானில் எங்களுக்கு ஓரளவு நல்ல தொடர் அமைந்தது. எனவே இந்தியாவிலும் நாங்கள் முதல் போட்டியை வெல்ல முயற்சிப்போம். அனைவரும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம். எனவே எங்களுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த முயற்சிப்போம்” என்று கூறினார்.



