ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி வரும் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடுமா என்ற சந்தேகம் காணப்படுகிறது. ஏனெனில் எல்லைப் பிரச்சனை காரணமாக 2008க்குப்பின் பாகிஸ்தானுக்கு செல்வதை இந்தியா முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. மேலும் அங்கு நடைபெற்ற 2023 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு சென்றுக்கு விளையாடாத இந்தியா தங்களது போட்டிகளை இலங்கையில் விளையாடியது.
அதே போல 2025 சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்துமாறு ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. ஆனால் விளையாட்டையும் அரசியலையும் ஒன்றாக கலக்காமல் பாகிஸ்தானுக்கு வந்து இந்தியா விளையாட வேண்டும் என்று வாசிம் அக்ரம், ஷாஹித் அப்ரிடி போன்ற பல முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பாகிஸ்தானுக்கு வந்துடாதீங்க:
இந்நிலையில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து விடக்கூடாது என முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கேட்டுக் கொண்டுள்ளார். ஏனெனில் பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சனை இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஒருவேளை இந்தியா வந்தால் அதை வைத்து பணத்தை சம்பாதிக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு பிரச்சனையை சரி செய்வதை மறந்து விடும் என்று கனேரியா தெரிவித்துள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தானில் தற்போதைய நிலைமையை பார்க்கும் போது இந்தியா அங்கு செல்லக்கூடாது என்றே நான் சொல்வேன். பாகிஸ்தான் தங்களது நிலைமையை பற்றி சிந்திக்க வேண்டும். ஐசிசி இது பற்றி முடிவு எடுக்க வேண்டும். பெரும்பாலும் இந்தியா ஹைபிரிட் மாடலில் துபாயில் விளையாடுவதற்கே வாய்ப்புள்ளது. ஒருவேளை இந்தியா வந்தால் இங்குள்ள ஊடகங்கள், வீடியோக்கள் போன்ற அனைத்தும் லைக்குகளை பெறும்”
பாதுகாப்பு பிரச்சனைகள்:
“இங்குள்ள பொருட்களும் விற்கப்படும். வீரர்களின் பாதுகாப்பு தான் முக்கியம். மரியாதை இரண்டாவது விஷயம். தற்சமயத்தில் பிசிசிஐ சிறந்த வேலையை செய்து வருகிறது. அவர்களின் இறுதி முடிவை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள்ளும் என்று நினைக்கிறேன். எனவே சாம்பியன்ஸ் டிராபி ஹைபிரிட் மாடலில் இருக்கும். இந்திய கிரிக்கெட் அணி வந்தால் பாகிஸ்தானுக்கு பணமும் வரும்”
இதையும் படிங்க: நான் இருக்கும்போது தனியா ஒரு ஆள் எதுக்கு? எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன் – லக்னோ அணிக்கு வாக்கு குடுத்த ஜாஹீர் கான்
“ஸ்பான்சர்ஷிப், ஊடகங்கள் வளர்ச்சி, பணம் போன்றவை பெருகும். ஆனால் தற்போது நீங்கள் முன்னேற்ற முயற்சிக்கும் மற்ற பகுதியையும் பார்க்க வேண்டும். இந்தியாவுக்கு நாங்கள் சென்ற போது அங்கே அனைத்தும் சிறப்பாக இருந்தது. உலகம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் வந்தனர். அங்குள்ள அரசு நல்ல வேலை செய்கிறது. இதுவே நிதர்சனமாகும்” என்று கூறினார். இந்த சூழ்நிலையில் ஐசிசி தலைவராக ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் பாகிஸ்தானுக்கு நிச்சயம் இந்தியா செல்லாது என்றே நம்பப்படுகிறது.



