வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக முதல் முறையாக பாகிஸ்தான் அவமானத் தோல்வியை சந்தித்தது. அத்துடன் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக டிக்ளர் செய்த பின்பும் தோல்வியை சந்தித்த முதல் அணியாக பாகிஸ்தான் மோசமான உலக சாதனை படைத்தது.
இந்த தோல்விக்கு சொந்த மண்ணில் வங்கதேசம் 565 ரன்கள் குவிக்கும் அளவுக்கு செயல்பட்ட பாகிஸ்தான் பவுலர்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றனர். குறிப்பாக ஷாஹீன் அப்ரிடி, நாசீம் ஷா ஆகியோர் வீசும் 130 – 135 கிலோமீட்டர் வேகம் எதிரணியிடம் எடுபடவில்லை. அதே போல முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு முழு நேர ஸ்பின்னரை கூட பாகிஸ்தான் தேர்ந்தெடுக்காதது தோல்விக்கு முக்கிய காரணம் என்னது.
பும்ராவை பாருங்க:
இந்நிலையில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர் போன்றவர்கள் காயத்திலிருந்து குணமடைந்து வந்த போது கூட வேகம் குறையவில்லை என முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரசித் லதீப் தெரிவித்துள்ளார். ஆனால் ஷாஹீன் அப்ரிடி போன்ற பாகிஸ்தான் பவுலர்களின் வேகம் 130க்கும் கீழே குறைந்து விட்டதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
“வேகம் தான் நம்முடைய பலம் என்பது உலகிற்கே தெரியும். ஆனால் தற்போது நம்முடைய டாப் வேகப்பந்து வீச்சாளர்கள் அதே வேகத்தில் வீசுவதில்லை. அது தான் முதல் போட்டியில் தோல்வியை சந்திக்க காரணம். அவர்களின் வேகம் அதிகமாக குறைந்து விட்டது. ஒருவேளை காயம் இருந்தால் அதை அவர்கள் வெளியே சொல்ல வேண்டும். ஷாஹீன், நாசீம், குர்ராம் ஆகியோர் 145 கி.மீ வேகத்தில் தங்களது கேரியரை துவங்கினர்”
வேகம் குறைந்தது எப்படி:
“ஆனால் தற்போது அவர்களுடைய வேகம் 130க்கு கீழே வந்து விட்டது. நம்முடைய பயிற்சியாளர்களை குறை சொல்ல வேண்டும். ஜோப்ரா ஆர்ச்சர் காயத்தை சந்தித்து 2 வருடங்கள் கழித்து வந்தார். அப்போதும் அவர் தனது வேகத்தை இழக்கவில்லை. ஜஸ்ப்ரித் பும்ரா முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு வந்த பின்பும் அதே வேகத்தில் வீசுகிறார்”
இதையும் படிங்க: பிஎஸ்எல்ல ஆடுன அப்றம் பாகிஸ்தானுக்கு என்ன தான் ஆச்சு? அந்த மேஜிக் எங்க போச்சு.. கெவின் பீட்டர்சன்
“காயத்தால் நீண்ட காலம் விளையாடாத பட் கமின்ஸ் மீண்டும் விளையாடிய போது வேகம் குறைந்ததாக தெரியவில்லை. ஆனால் நமது பவுலர்களின் வேகம் ஏன் குறைந்து விட்டது? இத்தனைக்கும் நமது பயிற்சியாளர்கள் தேவையான வேலையை செய்கின்றனர். இருப்பினும் வேகம் 144 கிலோமீட்டரில் இருந்து 128ஆக குறைந்து விட்டது” என்று கூறினார். அதே போல சொந்த மண்ணில் சூழ்நிலைகளை சரியாக படித்து அணியை தேர்ந்தெடுக்காததும் தோல்விக்கு காரணமானதாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.



