இலங்கைக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆகஸ்ட் 21ஆம் தேதி மான்செஸ்டரில் துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 236 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக கேப்டன் தனஞ்செயா டீ சில்வா 74, மிலன் ரத்நாயகே 72 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பசீர் 3, கிறிஸ் ஓக்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து நேர்த்தியாக விளையாடி 358 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் சதமடித்து 111 ரன்கள் அடுத்த நிலையில் இலங்கைக்கு அதிகபட்சமாக அசித்தா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
மேத்தியூஸ் விமர்சனம்:
அதன் பின் 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இலங்கை போராடி 326 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கமிண்டு மெண்டிஸ் சதமடித்து 113, தினேஷ் சண்டிமால் 79 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 3, மேத்தியூ போட்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். இறுதியில் 205 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு ஜோ ரூட் 62*, ஜேமி ஸ்மித் 39 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தனர்.
முன்னதாக அப்போட்டியின் 2வது இன்னிங்ஸில் இலங்கை 146-4 என்ற நிலையில் கமிண்டு மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்தியூஸ் நன்கு செட்டிலாகி முறையே 59, 33 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பந்து தேய்ந்து விட்டதால் வேறு பந்து கொடுக்குமாறு இங்கிலாந்து அணியினர் கேட்டது. அதை சோதித்த நடுவர்கள் வேறு பந்து கொடுத்தனர். அதைப் பயன்படுத்திய இங்கிலாந்து சீக்கிரமாக மேத்தியூஸ் அவுட்டாக்கிய போட்டியை கட்டுக்குள் கொண்டு வந்தது.
பந்து மாற்றம்:
இந்நிலையில் அந்த நேரத்தில் நியாயமின்றி பந்தை மாற்றியது தங்களுடைய தோல்விக்கு காரணமானதாக இங்கிலாந்தையும் நடுவர்களையும் ஏஞ்சலோ மேத்யூஸ் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையில் அது துரதிஷ்டம். நேற்று நாங்கள் பந்து மாற்றப்படும் வரை நன்றாக அமர்ந்திருந்தோம். அது 2 அணிகளின் பேட்ஸ்மேன்களுக்கும் நியாயமற்றது என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க: முதல் டெஸ்டில் அதுல மிஸ் பண்ணிட்டோம்.. 2வது போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்துவோம்.. இலங்கை கேப்டன்
“ஏனெனில் பேட்ஸ்மேன்கள் பந்தின் கடினத்தன்மையையும் பளபளப்பையும் போக்க வேண்டியிருந்தது. 48வது ஓவர் வரை நாங்கள் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தோம். அந்த பந்து மாற்றப்பட்டது மொத்த போட்டியையும் மாற்றியதாக நான் நினைக்கிறேன். ஏனெனில் அந்த பந்து இருபுறமும் ஸ்விங்கானதால் எதிர்கொள்வது கடினமாக இருந்தது. அதனால் பேட்ஸ்மேன்கள் பந்தின் கடினத்தன்மை போகும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அப்படி பந்து மாற்றப்பட்டது போட்டியின் முடிவை மாற்றியது” என்று கூறினார்.



