பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வங்கதேசம் அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 21ஆம் தேதி ராவல்பிண்டி நகரில் துவங்கியது. மழையால் தாமதமாக துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு அப்துல்லா சபீக் ஆரம்பத்திலேயே 2 ரன்னில் அவுட்டானார். அதைத்தொடர்ந்து வந்த கேப்டன் ஷான் மசூதை 6 ரன்களில் காலி செய்த சோரிபுல் இஸ்லாம் அடுத்ததாக வந்த பாபர் அசாமையும் டக் அவுட்டாக்கினார். அதனால் 16/3 என ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் தடுமாறியது.
மீண்ட பாகிஸ்தான்:
அந்த சூழ்நிலையில் மற்றொரு துவக்க வீரர் சாய்ம் ஆயுபுடன் அடுத்ததாக களமிறங்கிய சௌட் ஷாக்கில் ஜோடி சேர்ந்த நிதானமாக விளையாடினார். அப்படி நேரம் செல்ல செல்ல நங்கூரமாக விளையாடிய இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தானை சரிவிலிருந்து மீட்டெடுத்து பிரிந்தது. அதில் சாய்ம் ஆயுப் அரை சதமடித்து 56 ரன்கள் குவித்தார்.
அவருடன் சேர்ந்து விளையாடிய சௌட் ஷாக்கில் தம்முடைய பங்கிற்கு அரை சதமடித்தார். அதனால் முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் பாகிஸ்தான் 158/3 ரன்கள் நல்ல நிலைக்கு வந்துள்ளது. களத்தில் புதிதாக வந்துள்ள முகமது ரிஸ்வான் 24*, சௌட் ஷாக்கீல் 56* ரன்களுடன் உள்ளனர். மறுபுறம் பந்து வீச்சில் ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகளை எடுத்த வங்கதேசம் மேற்கொண்டு ஒரு விக்கெட் மட்டுமே எடுத்து நல்ல துவக்கத்தை கோட்டை விட்டது.
அதிவேக 1000:
முன்னதாக இப்போட்டியில் இதுவரை 56 ரன்கள் குவித்துள்ள பாகிஸ்தான் வீரர் சௌட் ஷாக்கீல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 20 இன்னிங்ஸில் 1024 ரன்கள் எடுத்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்காக அதிவேகமாக 1000 ரன்கள் அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இதற்கு முன் இதே மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 1959ஆம் ஆண்டு பாகிஸ்தான் வீரர் சயீத் அஹ்மதும் 20 இன்னிங்ஸ் 1000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிங்க: ஐ.பி.எல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாகவே சி.எஸ்.கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு அடிக்கவுள்ள ஜாக்பாட் – விவரம் இதோ
அதே பட்டியலில் உலக அளவில் இங்கிலாந்தின் ஹெர்பர்ட் சுட்க்ளிப், வெஸ்ட் இண்டீஸ் அணியின் சர் எவர்டன் வீக்ஸ் ஆகியோர் 12 இன்னிங்ஸில் 1000 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளனர். இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் டான் பிராட்மேன் (13 இன்னிங்ஸ்) உள்ளார். மூன்றாவது இடத்தில் இந்தியாவின் வினோத் காம்ப்ளி மற்றும் நெயில் ஹார்வி (தலா 14 இன்னிங்ஸ்) ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.



