வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தன்னுடைய சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டி மழையால் டிராவில் முடிந்தது. அந்த நிலையில் 2வது போட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி கயானா நகரில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்கியது.
அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ஐடன் மார்க்ரம் 14, டீ ஜோர்ஸி 1, கேப்டன் பாவுமா 0, வியன் முல்தார் 0, மகாராஜ் 0 ரன்களில் அவுட்டானார்கள். அதே போல நிதானமாக விளையாட முயற்சித்த ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 26, பேடிங்கம் 28, கெய்ல் வேர்ரின் 21 ரன்கள் எடுத்துப் போராடி அவுட்டானார்கள்.
முதல் நாளில் 17 விக்கெட்ஸ்:
அதனால் 97/9 என தினறிய தென்னாப்பிரிக்கா 120 ரன்களை தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நன்ரே பர்கர் மற்றும் டேன் பியேட் ஆகியோர் நங்கூரமாக விளையாடி வெஸ்ட் இண்டீஸை கடுப்பேற்றும் ரன்களை எடுத்தனர். மறுபுறம் இந்த ஜோடியை எளிதில் பிரிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் திண்டாட்டினர்.
அதை பயன்படுத்தி கடைசி விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் பியேட் 38* ரன்களும் பர்கர் 23 ரன்களும் எடுத்து கை கொடுத்தனர். அதனால் ஓரளவு தப்பித்து தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பந்து வீச்சில் அசத்திய வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக சமர் ஜோசப் 5, ஜெய்டேன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு கேப்டன் பிரத்வெயிட் 3, லூயிஸ் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அடுத்து வந்த அலிக் அதனேஷ் 1, காவெம் ஹோட்ஜ் 4 ரன்களில் வியன் முல்தார் வேகத்தில் அவுட்டானார்கள். அதே போல மறுபுறம் போராடிய கேசி கார்ட்டி 26 ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த ஜோஸ்வா டா சில்வா 4 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதனால் முதல் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 97/7 என தடுமாறி வருகிறது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பிடிக்கலனாலும்.. அவங்க தான் எனக்கு பிடிச்ச பேட்ஸ்மேன், பவுலர்.. வாசிம் அக்ரம் பாராட்டு
களத்தில் ஹோல்டர் 33*, மோட்டி 11* ரன்களுடன் உள்ளனர். தற்போதைய நிலைமையில் வெஸ்ட் இண்டீஸ் 63 ரன்கள் பின்தங்கியுள்ளது. அந்த 63 ரன்களை 10வது விக்கெட்டுக்கு எடுத்த டேன் பியேட் – நன்ரே பர்கர் ஜோடி தான் தற்போது இப்போட்டியை தென்னாப்பிரிக்காவின் பக்கம் மாற்றியுள்ளனர் என்றே சொல்லலாம். மொத்தத்தில் முதல் நாளிலேயே 17 விக்கெட்டுகள் விழுந்த இந்த போட்டியில் மீண்டும் தென்னாபிரிக்கா முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.



