இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகையான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த ஒரே இந்திய கேப்டனாக பெருமை பெற்றவர். ஆரம்ப கட்டத்தில் கங்குலியின் ஆதரவினால் வாய்ப்பை பெற்ற அவர் பின்னர் தானே இந்திய அணியின் கேப்டனாக மாறி பல்வேறு வீரர்களை வளர்த்து விட்ட பெருமைக்கும் சொந்தக்காரராக மாறினார்.
2007-ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் தோல்வியை சந்தித்த பிறகு டி20 அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் அதே ஆண்டு டி20 உலக கோப்பையை வென்று கோப்பையை கைப்பற்றி அசத்தினார்.
அதன் பின்னர் படிப்படியாக இந்திய அணியை தனது தோளில் தாங்கிய தோனி 2011-ஆம் ஆண்டு 50 ஓவர் உலககோப்பையும் வென்று கொடுத்தார். இப்படி குறுகிய காலத்திலேயே இரண்டு உலக கோப்பையை வென்று கொடுத்த அவர் 2013-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியையும் கைப்பற்றி மூன்று வகையான ஐசிசி கோப்பையையும் கைப்பற்றி கொடுத்த கேப்டனாக மாறினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக அவர் ஏராளமான சாதனையை நிகழ்த்தி இருந்தாலும் அதேபோன்று ஒரு அதிரடியான ஃபினிஷராகவும் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்று இந்திய அணியில் இருந்து வெளியேறினார்.
அதன் பின்னர் தற்போது ஐந்து ஆண்டுகளாகியும் அவரது ஒரு சாதனை இன்னும் யாராலும் நெருங்க முடியாத அளவிற்கு உள்ளது. அந்த வகையில் அவர் படைத்துள்ள சாதனை யாதெனில் : ஒருநாள் போட்டிகளில் கடைசி பத்து ஓவர்களில் அதிக ரன்கள் அடித்த வீரராக அவர் உலகளவில் முதலிடத்தில் உள்ளார். கடைசி பத்து ஓவர்களில் 128 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 4027 ரன்களை அவர் அடித்துள்ளார்.
இதையும் படிங்க : தரமான பவுலரா முன்னேறிட்டேன்.. இந்திய அணியில் கம்பேக் கொடுக்க இதை செய்யப் போறேன்.. உம்ரான் மாலிக்
தோனிக்கு அடுத்தபடியாக மேத்யூஸ் 2195 ரன்கள், ஜாஸ் பட்லர் 1894 ரன்கள், டேவிட் மில்லர் 1776 ரன்கள் என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ஆனால் இவர்கள் மூவருமே நான்காயிரம் ரன்களை நெருங்குவதற்கு முன்பாகவே ஓய்வை அறிவித்து விடுவார்கள் என்பதால் இந்த சாதனையை முறியடிக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்பது நிதர்சனமான உண்மை.



