பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீப காலங்களாகவே தொடர்ச்சியாக வெற்றிகளை பெறுவதற்கு தடுமாறி வருகிறது. உண்மையை சொல்ல வேண்டுமெனில் சமீப காலங்களில் பாகிஸ்தான் கத்துக்குட்டி அணிகளிடம் தோல்வியை சந்தித்து வருகிறது. எடுத்துக்காட்டாக 2022 டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் 2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானிடம் முதல் முறையாக அவமானத் தோல்வியை பதிவு செய்தது.
அந்த வரிசையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையில் கத்துக் குட்டியான அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் தோற்றது. அப்போட்டியில் அமெரிக்காவுக்கு எதிராக வெறும் 160 ரன்களை அடிக்க முடியாமல் தோற்ற பாகிஸ்தான் சூப்பர் ஓவரிலும் பரிதாபமாக தோற்றது. அதை விட இந்தியாவுக்கு எதிராக வெறும் 120 ரன்களை துரத்திய பாகிஸ்தான் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பிக்ஸிங் தோல்வியா:
ஆனால் அப்போட்டிலும் சுமாராக விளையாடிய பாகிஸ்தான் வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் பரம எதிரி இந்தியாவிடம் தோற்றது. அதனால் பாகிஸ்தான் வீரர்கள் பிக்ஸிங் செய்து தோல்வியை சந்தித்தார்களா என்ற பேச்சுக்கள் அந்த சமயத்தில் காணப்பட்டது. ஏனெனில் கடந்த காலங்களில் சல்மான் பட், முகமது அமீர், முகமது ஆசிப் ஆகியோர் பிக்ஸிங் செய்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தடை பெற்றனர்.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் தங்களுடைய வீரர்கள் யாரும் பிக்சிங் செய்யவில்லை என பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டன் ஷான் மசூட் தெரிவித்துள்ளார். அத்துடன் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறுவதே தங்களுடைய இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி இந்தியா டுடே இணையத்தில் செய்தியாளரின் கேள்விக்கு அவர் பதிலளித்து பேசியது பின்வருமாறு.
“மேட்ச் பிக்சிங் என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்திய காரணத்தால் எங்கள் வீரர்களின் நோக்கத்தை என்னால் கேள்வி கேட்க முடியாது. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தற்போதைய அமைப்பில் அவர்களின் நேர்மையை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று நினைக்கிறேன். இது எனக்கு சற்றும் உடன்படாத ஒன்று. உலகக்கோப்பை முடிந்து போன ஒன்றாகும். எனவே அடுத்து வரும் போட்டிகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க: ஐபிஎல் ஓனர்களை இப்படியே விட்டா அதை மாத்திடுவாங்க.. வெளிநாட்டு வாரியங்களை எச்சரித்த இயன் சேப்பல்
“எங்களின் அனைத்து வீரர்களும் பாகிஸ்தானுக்காக வெற்றி பெற விரும்புகிறார்கள் என்பதை என்னால் உத்தரவாதமாக கொடுக்க முடியும். அதில் வெற்றி தோல்விகள் உள்ளன. நாங்கள் தோற்கும் போதெல்லாம் மிகவும் சோகமாக இருக்கிறோம். டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இன்னும் நிறைய விளையாட வேண்டும். குறிப்பாக சொந்த மண்ணில் நடைபெறும் 7 டெஸ்ட் போட்டிகளை முழுமையாக பயன்படுத்த முயற்சிப்போம். அதே சமயம் புள்ளிகளை பெற தென்னாபிரிக்காவிலும் தொடரை வெல்வது சிறந்த வாய்ப்பாகும்” என்று கூறினார்.



