அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருடன் இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா ஓய்வு பெற்றதன் காரணமாக டி20 இந்திய அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயம் நிர்வாகத்திற்கு ஏற்பட்டது. ரோகித் சர்மாவிற்கு அடுத்து இந்திய அணியின் கேப்டனாக தகுதியுடையவர் என்று பார்க்கப்பட்ட ஹார்டிக் பாண்டியா இருந்தும் டி20 அணியின் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார்.
கடந்த சில ஆண்டுகளாகவே பாண்டியா தான் அடுத்த கேப்டனாக பார்க்கப்பட்டு வந்த வேளையில் தற்போது அவரை தாண்டி சூர்யா குமார் யாதவ் டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மேலும் சூரியகுமார் யாதவியின் இந்த கேப்டன்சி நியமனம் குறித்தும் பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் இது குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அப்படி அவர் கூறியதாவது : இந்திய அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடிய அனைத்து டி20 போட்டிகளிலும் சூரியகுமார் யாதவ் இடம் பிடித்து விளையாடி இருக்கிறார்.
தனது பணிச்சுமையை பற்றி கவலைப்படாமல் இந்திய அணி பங்கேற்ற அனைத்து டி20 போட்டிகளிலும் அவர் ஓய்வின்றி விளையாடியுள்ளார். இந்த ஈடுபாடு அவர் கேப்டன்சி பதவிக்கு தகுதியான நபர் தான் என்பதை முதலில் வெளிகாட்டும் விதமாக அமைந்தது.
அதேபோன்று ரோகித் சர்மா மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் ஓய்வு எடுத்துக் கொண்ட வேளைகளில் எல்லாம் இந்திய அணியின் முக்கிய வீரராகவும், கேப்டனாகவும் இருந்து அணியை வழிநடத்தியதால் பிசிசிஐ-க்கு அவர் மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டது. அதேபோன்று மும்பை அணிக்கு வருவதற்கு முன்பாகவே கே.கே.ஆர் அணியின் துணை கேப்டனாக இருந்த நேரத்தில் கம்பீர் அவரை உற்று நோக்கியுள்ளார்.
இதையும் படிங்க : ரோஹித் சர்மா மற்றும் தோனி இருவரில் சிறந்த கேப்டன் யார்? ஷர்துல் தாகூர் அளித்த பதில் – நல்லா சமாளிக்குறாரு
அப்படி அவரது பார்வையில் சூரியகுமார் யாதவின் அனுபவமும் தெரிந்திருக்கிறது. மேலும் உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனாக இருந்தாலும், களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவரது செயல்பாடுகள், வீரர்களுக்கு மத்தியில் அவருக்கு இருக்கும் உறவு என பல்வேறு சாதகங்கள் அவருக்கு சாதகமாக அமைந்ததால் சூரியகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.



