இந்திய கிரிக்கெட் அணி 27 வருடங்கள் கழித்து முதல் முறையாக இலங்கைக்கு எதிராக ஒரு ஒருநாள் இருதரப்பு தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற அத்தொடரின் முதல் போட்டியை இந்தியா போராடி சமன் செய்தது. ஆனால் அதன் பின் மிகவும் மோசமாக விளையாடிய இந்தியா 2014க்குப்பின் 10 வருடங்கள் கழித்து இலங்கைக்கு எதிராக அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளில் தோற்றது.
இத்தனைக்கும் இலங்கையை விட தரமான வீரர்களை கொண்டிருக்கும் இந்தியா ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக திகழ்கிறது. ஆனால் தரமான வீரர்களை கொண்டிருந்தும் சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் இலங்கை ஸ்பின்னர்களை சமாளிக்க முடியாமல் இந்தியா தோல்வியை சந்தித்தது. குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி நல்ல துவக்கத்தை கொடுத்தார்.
நம்ப முடியல:
இருப்பினும் எதிர்புறம் மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்காமல் ஏமாற்றத்தை கொடுத்தனர். குறிப்பாக விக்கெட்டுகள் விழும்போதெல்லாம் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நங்கூரமாக விளையாடி வெற்றி பெற வைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தன்னுடைய 15 வருட ஒருநாள் கேரியரில் முதல் முறையாக இத்தொடரில் விராட் கோலி 3 போட்டிகளிலும் ஸ்பின்னர்களிடம் எல்பிடபுள்யூ முறையில் அவுட்டாகி இந்தியா தோல்வியடைய காரணமானார்.
இந்நிலையில் இத்தொடரில் ரோஹித் சர்மாவுக்கு பின் அக்சர் படேல் தான் இந்தியாவுக்கு அதிக ரன்கள் அடித்ததாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஆனால் மிகவும் எதிர்பார்த்த விராட் கோலி ஸ்பின்னர்களிடம் தொடர்ந்து 3 முறை அவுட்டானது தமக்கு ஆச்சரியமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“நம்புகிறீர்களோ இல்லையோ இந்தத் தொடரில் ரோஹித் சர்மாவுக்குப் பின் அக்சர் படேல் தான் நம்முடைய 2வது சிறந்த பேட்ஸ்மேன். மறுபுறம் விராட் கோலி 3 இன்னிங்க்ஸில் 3 முறை ஸ்பின்னர்களுக்கு எதிராக எல்பிடபுள்யூ முறையில் அவுட்டானார். கடைசியாக அது எப்போது நடந்தது என்று எனக்குத் நினைவில்லை. இத்தொடரில் தவறான லைனில் விளையாடிய அவர் ஒவ்வொரு முறையும் ரிவியூ எடுத்தார்”
இதையும் படிங்க: நினைச்சதை பேசி சொல்ல முடியல.. 2011 உ.கோ வென்ற பயிற்சியாளர் பற்றி பாகிஸ்தான் வீரர் நாசீம் ஷா பேட்டி
“அவரால் இந்தத் தொடரில் தன்னைத் தானே ஈடுபடுத்திக் கொள்ள முடியவில்லை. ஸ்ரேயாஸ் ஐயர் ஸ்பின்னர்களை நன்றாக எதிர்கொள்ளக்கூடிய வீரராக கருதப்படுகிறார். ஆனால் அவரும் 2 முறை ஸ்பின்னர்களிடம் அவுட்டானார். ஸ்பின்னர்களுக்கு எதிராக அசத்தக்கூடிய நமது வீரர்கள் இப்படி சுமாராக செயல்பட்டுள்ளார்கள். அதனால் நமது அணியில் என்ன நடக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று கூறினார்.



