இலங்கைக்கு எதிரான முதல் போட்டியை சமன் செய்த இந்தியா 2வது போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அந்த நிலையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதி கொழும்பு நகரில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இந்திய கிரிக்கெட் அணியில் கே.எல் ராகுல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் நீக்கப்பட்டு ரிஷப் பண்ட் மற்றும் ரியான் பராக் ஆகியோர் ஏற்கப்பட்டார்கள். குறிப்பாக ரியான் பராக் அறிமுகமாக களமிறங்கிய நிலையில் ரிஷப் விக்கெட் கீப்பராக கம்பேக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை மீண்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போராடி 50 ஓவரில் 248/7 ரன்கள் எடுத்தது.
தோனி போன்ற ஸ்டைல்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக நிசாங்கா 45, அவிஷ்கா பெர்னாண்டோ 96, குஷால் மெண்டிஸ் 59 ரன்கள் எடுத்தனர். மறுபுறம் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அறிமுக வீரர் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். முன்னதாக அப்போட்டியில் 49வது ஓவரில் குல்தீப் யாதவ் சுழலில் குசால் மெண்டிஸ் அவுட்டான பின் மஹீஸ் தீக்சனா களமிறங்கினார்.
அப்போது அந்த ஓவரின் கடைசி பந்தை இறங்கி சென்று சிக்சர் அடிக்க முயற்சித்த அவர் மொத்தமாக தவற விட்டார். மறுபுறம் அவர் வெளியே சென்றதுமே விக்கெட் கீப்பர் ரிசப் பண்ட் பந்தை லாவகமாக பிடித்து விட்டார். ஆனால் அப்போது உடனடியாக ஸ்டம்பிங் செய்யாத அவர் “பேட்ஸ்மேன் உள்ளே வரட்டும். பின்னர் கடைசி நொடியில் தோனி போல ஸ்டைலாக ஸ்டம்பிக் செய்வோம்” என்று தீக்சனாவை பார்த்துக் கொண்டே மெதுவாக கையை கொண்டு சென்றார்.
ஆனால் அவரின் சோம்பேறித்தனத்தை பயன்படுத்திக் கொண்ட தீக்சனா அப்படியே பின்னோக்கி சுழன்று வெள்ளைக்கோட்டை தொட்டு விட்டார். அதன் பின்பு ரிஷப் பண்ட் ஸ்டம்ப்பிங் செய்தும் புண்ணியம் இல்லாதது போல் விக்கெட் கிடைக்கவில்லை. அதை பார்த்த பயிற்சியாளர் ஜெயசூர்யாவும் இலங்கை ரசிகர்களும் சிரித்து கலாய்த்தனர்.
இதையும் படிங்க: 2 ஆண்டுகளுக்கு பின்னர் ரோஹித் சர்மா அசத்தல்.. விராட் கோலியை மிஞ்சி புதிய சாதனை – வெளியான ரேங்கிங் இதோ
மறுபுறம் ரிஷப் பண்ட் சோம்பேறித்தனத்தை பயன்படுத்தி மேற்கொண்டு விளையாடிய தீக்சனா 3* ரன்கள் எடுத்தார். ஆனால் இந்த தொடரின் முதல் போட்டி சமனில் முடிந்த நிலையில் 1 ரன் கூட மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அது தெரிந்திருந்தும் சோம்பேறித்தனமாக செயல்பட்ட ரிசப் பண்ட் கைக்கு கிடைத்த விக்கெட்டை கோட்டை விட்டது மட்டுமில்லாமல் 3 ரன்களையும் எதிரணிக்கு கொடுத்தார். அதனால் கோபமடையும் இந்திய ரசிகர்கள் இந்த விளையாட்டுத்தனத்தை எப்போது விடுவீர்கள்? என்று ரிஷப் பண்ட்டை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.



