இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை சமன் செய்த இந்தியா 2வது போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஆகஸ்ட் நான்காம் தேதி கொழும்புவில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 241 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 64 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார்.
ஆனால் எதிர்ப்புறம் அக்சர் பட்டேல் 44 ரன்கள் எடுத்ததை தவிர்த்து விராட் கோலி உள்ளிட்ட மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்கத் தவறினர். அதனால் இந்தியாவை 208 ரன்களுக்கு சுருட்டிய இலங்கை டி20 தொடரில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்து 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அந்த வகையில் தரமான சுழல் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்த போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
பாகிஸ்தான் போல:
இந்நிலையில் பாகிஸ்தானை போலவே இந்திய கிரிக்கெட் அணியும் தரமான சுழல் பந்துகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மறந்து விட்டார்களா? என முன்னாள் வீரர் பசித் அலி விமர்சித்துள்ளார். அத்துடன் சிவம் துபேவுக்கு பதிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா போன்ற ஆல் ரவுண்டர்களை கௌதம் கம்பீர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி பசித் அலி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தானுக்கு பின்பு ஸ்பின்னர்களுக்கு எதிராக எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை இந்தியாவும் மறந்து விட்டதாக நான் உணர்கிறேன். ஒருவேளை அவர்கள் அதிகமாக டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதால் இப்படி இருக்கலாம். குறிப்பாக சிவம் துபே அவுட்டானதை பார்த்து எனக்கு ஏமாற்றம் கிடைத்தது”
“அவரால் சுழல் பந்துகளை கையால் கூட படிக்க முடியவில்லை. முதல் போட்டியில் வாஷிங்டன் சுந்தரும் கிட்டத்தட்ட அதே போல அவுட்டானார். சிவம் துபேவை டி20 அணியில் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். ஒருநாள் அணியில் தேர்ந்தெடுக்காதீர்கள். அல்லது முதலில் அவரை உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் அதிகமாக விளையாட வையுங்கள். ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா இல்லாமல் இந்திய அணி முழுமையடையாது”
இதையும் படிங்க: இலங்கை அணிக்கெதிரான இந்த தொடரில் அவங்க 2 பேருக்கும் கம்பீர் ஓய்வு கொடுத்திருக்க வேண்டும் – ஆஷிஷ் நெஹ்ரா
“இத்தொடரில் கௌதம் கம்பீர் தவறான பேட்டிங் கலவையை பயன்படுத்துகிறார். ஒருவேளை நீங்கள் இடது வலது கை சேர்க்கையை பயன்படுத்த விரும்பினால் அக்சர் பட்டேல் மேலே வர வேண்டும். சிவம் துபேவுக்கு பதிலாக 2 கீப்பர்கள் இருந்தாலும் பரவாயில்லை என்று கருதி ரிஷப் பண்ட்டை விளையாடியிருக்க வேண்டும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் கடைசி போட்டி ஜூலை 7ஆம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.



