இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை இந்திய கிரிக்கெட் அணி சமன் மட்டுமே செய்தது. ஆனால் இரண்டாவது போட்டியில் இன்னும் மோசமாக விளையாடிய இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஆகஸ்ட் 4ஆம் தேதி கொழும்பு நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 240/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதைத் தொடர்ந்து சேசிங் செய்த இந்தியாவுக்கு மீண்டும் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 64 ரன்கள் குவித்து அட்டகாசமான துவக்கத்தை கொடுத்தார். ஆனால் மீண்டும் முதல் போட்டியை போலவே எதிர்ப்புறம் தடுமாறிய சுப்மன் கில் 35 ரன்களில் அவுட்டானார். அதே போல அக்சர் படேல் 44 ரன்கள் எடுத்ததை தவிர்த்து விராட் கோலி 14, துபே 0, ஸ்ரேயாஸ் 7, ராகுல் 0 என மற்ற வீரர்கள் வண்டர்சே சுழலில் சொற்ப ரன்களில் அவுட்டாகி கைவிட்டனர்.
தோல்விக்கான காரணம்:
அதனால் 208 ரன்களுக்கு இந்தியாவை சுருட்டிய இலங்கை டி20 தொடரில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்து 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் இலங்கையை விட தரமான வீரர்களை கொண்டிருந்தும் இந்தியா 240 ரன்களை அடிக்க முடியாமல் தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் அடுத்தடுத்த போட்டிகளில் சீட்டுக்கட்டு போல சரிந்து தோல்வியை சந்தித்தது தமக்கே ஏமாற்றமளிப்பதாக இந்திய அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார்.
எனவே விரைவில் அதைப்பற்றி இந்திய பேட்ஸ்மேன்களுடன் பேசி முன்னேற்றத்தை காண்போம் என்று தெரிவிக்கும் அவர் தோல்விக்கான காரணம் பற்றி பேசியது பின்வருமாறு. “இது ஷாக் என்று கேட்டால்? ஆம் இது ஆச்சரியம் தான். ஆனால் இது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் இதை புரிந்துகொண்டு எதிர்பார்ப்பீர்கள். ஏனெனில் ஸ்பின்னர்களுக்கு இங்கே அதிக ஆதரவு கிடைத்தது”
“கடந்த போட்டியிலும் புதிய பந்துக்கு எதிராக உங்களால் எதிராக அடிக்க முடிந்தது. ஆனால் பந்து பழையதாகும் போது 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது கடினமாக மாறியது. சில நேரங்களில் குறிப்பாக 50 ஓவர் கிரிக்கெட்டில் இது போன்ற கடினமான சூழ்நிலைகள் ஏற்படும். எனவே நாங்கள் மீண்டும் சென்று அடுத்தடுத்த போட்டிகளில் ஏன் இப்படி நடந்தது என்பதைப் புரிந்துகொண்டு எங்களை சரி செய்ய வேண்டும்”
இதையும் படிங்க: அவர் ஜான்டி ரோட்ஸ் மாதிரி அசத்துனாரு.. பயிற்சியாளர் இல்லாமலேயே 2024 டிஎன்பிஎல் வென்றது பற்றி அஸ்வின் பேட்டி
“கடந்த போட்டியில் எங்களால் சிறிய பார்ட்னர்ஷிப் அமைக்க முடிந்தது. ஆனால் இன்று மொத்தமாக விக்கெட்டுகளை இழந்தோம். இலங்கை நன்றாக பந்து வீசியது. வேண்டர்சே சரியான லென்த்தை வீசினார். எனவே நீங்கள் இலங்கைக்கு கொஞ்சம் அதிக பாராட்டு கொடுக்க வேண்டும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து கடைசி போட்டியிலாவது இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.



