ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி வரும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. வரலாற்றில் முதல் முறையாக தங்களுடைய நாட்டில் நடைபெற உள்ள இந்தத் தொடரை வெற்றிகரமாக நடத்த பாகிஸ்தான் வாரியம் தயாராகி வருகிறது. ஆனால் அத்தொடரில் எல்லைப் பிரச்சனை காரணமாக பாகிஸ்தானுக்கு சென்று இந்திய கிரிக்கெட் அணி விளையாடுமா என்பது சந்தேகமாக இருந்து வருகிறது.
2008க்குப்பின் பாகிஸ்தானுக்கு செல்வதை முற்றிலுமாக நிறுத்தியுள்ள இந்தியா ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே அந்த அணியுடன் விளையாடி வருகிறது. அந்த சூழ்நிலையில் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்றது. ஆனால் அத்தொடரில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத இந்தியா தங்களுடைய போட்டிகளை இலங்கையில் விளையாடி வெற்றி பெற்றது.
பொருட்டே அல்ல:
அதே போல இம்முறையும் தங்களுடைய சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்துங்கள் என ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாட தங்கள் நாட்டுக்கு இந்தியா வரவில்லையெனில் அது பாகிஸ்தானுக்கு ஒரு பொருட்டல்ல என முன்னாள் வீரர் சக்லைன் முஸ்டக் தெரிவித்துள்ளார்.
மேலும் ஐசிசி நடத்தும் அந்தத் தொடரில் இந்தியா விளையாடவில்லையெனில் அதற்கு ஐசிசி கவலைப்பட வேண்டுமே தவிர பாகிஸ்தான் கவலைப்படாது என்றும் அவர் கூறியுள்ளார். எனவே பாகிஸ்தான் மண்ணில் இந்தியாவை விளையாட வைப்பது ஐசிசியின் பொறுப்பு என்று தெரிவிக்கும் முஸ்டக் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது மிகவும் எளிது. ஒருவேளை இந்தியா விரும்பினால் அவர்கள் வந்து விளையாடலாம்”
“ஒருவேளை அவர்கள் வர விரும்பவில்லை என்றால் பரவாயில்லை. அது ஒரு பொருட்டல்ல. அதைப்பற்றி வம்பு செய்வதில் அர்த்தம் இல்லை. அதனால் எதுவும் நல்லது அல்லது கெட்டதாகி விடாது. ஏனெனில் இது ஐசிசி நடத்தப் போகும் தொடர். எனவே இந்த விஷயத்தை அவர்கள் தான் பார்க்க வேண்டும்” என்று கூறினார். முன்னதாக வாசிம் அக்ரம், சாகித் அப்ரிடி போன்ற பல முன்னாள் பாகிஸ்தான் கேப்டன்கள் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: துணை கேப்டனாகிட்டோம்ன்னு இப்படி ஆடுனா.. உங்க இடத்தை அவர் பறிச்சுடுவாரு.. கில்லை எச்சரித்த சல்மான் பட்
குறிப்பாக அரசியலையும் விளையாட்டையும் ஒன்றாக கலக்காமல் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும் என்று வாசிம் அக்ரம் கேட்டுக் கொண்டார். அதே போல பாகிஸ்தானுக்கு வந்து விளையாடினால் விராட் கோலி இந்தியாவையே மறந்து விடுவார் என்று சாகித் அப்ரிடி தெரிவித்திருந்தார். இப்படி பல்வேறு விதமான கருத்துக்கள் காணப்படுவதால் இந்த விவகாரத்தில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.



