ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது. அந்த வெற்றிக்கு அனைத்து வீரர்களுமே முக்கிய பங்காற்றிய நிலையில் வேகப்பந்து வீச்சு துறையில் அர்ஷ்தீப் சிங் 17 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினார். அத்துடன் ஒரு உலகக் கோப்பையில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற உலக சாதனையையும் அவர் சமன் செய்தார்.
மேலும் ஜஸ்ப்ரித் பும்ரா நிகராக அர்ஷ்தீப் சிங் பந்து வீசியதாலயே இந்தியா வென்றதாக ரமீஸ் ராஜா போன்ற முன்னாள் வீரர்கள் பாராட்டினர். கடந்த 2018 அண்டர்-19 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் அப்படியே ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் ஓரளவு நன்றாக விளையாடினார். அதன் காரணமாக இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு பெற்றுள்ள அவர் வருங்கால வேகப்பந்து வீச்சாளராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.
தோனியின் வழி:
அந்த வகையில் இந்தியாவுக்காக இதுவரை 54 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அர்ஷ்தீப் 83 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதே போல 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 10 எடுத்து அசத்தி வருகிறார். இந்நிலையில் எப்போதும் முடிவைப் பற்றி கவலைப்படாமல் செயல்முறையில் கவனம் செலுத்தும் தோனியின் வழியை தாமும் பின்பற்றுவதாக அர்ஷ்தீப் சிங் கூறியுள்ளார்.
மேலும் நாட்டுக்காக புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமத் சிராஜ் போன்ற தரமான சீனியர் பவுலர்களுடன் இணைந்து விளையாடுவது தமக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ஜூலை 30ஆம் தேதி இந்தியா – இலங்கை அணிகள் புதிய மூன்றாவது டி20 போட்டிக்கு முன்பாக அவர் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “எப்போதும் நாட்டுக்காக விளையாடுவதே உங்களுடைய கனவாக இருக்கும்”
“அந்த வாய்ப்பை நான் பெற்றுள்ளதற்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். நான் நிறைய ஆதரவுகளை பெற்றேன். பெரும்பாலும் நான் அழுத்தத்தை விரும்புவேன். அது போன்ற சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்படுவதற்கும் நான் விரும்புவேன். எப்போதும் நான் புதிய வேரியேசன்களை முயற்சி செய்கிறேன். சில நேரங்களில் அது வேலை செய்யும். சில நேரங்களில் வேலை செய்யாது”
இதையும் படிங்க: 3வது இலங்கை டி20 போட்டியில் 4 வீரர்களுக்கு ஓய்வளித்த சூர்யகுமார்.. இந்திய பிளேயிங் லெவன் இதோ
“நான் முடிவுகளை பார்க்காமல் செயல்முறையில் கவனம் செலுத்துகிறேன். புவனேஸ்வர், பும்ரா, தற்போது சிராஜ் போன்ற சில மகத்தான பவுலர்களுடன் இணைந்து விளையாடுவதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். எங்களுடைய அணியில் நல்ல சூழ்நிலை நிலவுகிறது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 2024/25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமாகும் வாய்ப்பை அர்ஷ்தீப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



