24 பந்தில் 50.. வெ.இ அணியை ஓடவிட்ட பென் ஸ்டோக்ஸ் 43 வருட சாதனை.. இங்கிலாந்து உலக சாதனை சமன்

ENG vs WI 3
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் இங்கிலாந்து வென்றது. அந்த நிலையில் மூன்றாவது போட்டி ஜூலை 26ஆம் தேதி பர்மிங்காம் நகரில் துவங்கியது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி முதல் இன்னிங்ஸ் 282 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 59, ஜோஸ்வா டா சில்கா 49 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கஸ் அட்கின்ஷன் 4, கிறிஸ் ஓக்ஸ் 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

மிரட்டிய ஸ்டோக்ஸ்:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸ் 376 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது. சொல்லப்போனால் 54/5 என தடுமாறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் 87, ஜெமி ஸ்மித் 95, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 54, கிறிஸ் ஓக்ஸ் 62 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகள் செய்தார்.

அதைத் தொடர்ந்து 94 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் இரண்டாவது இன்னிங்ஸில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 175 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணிக்கு அதிகபட்சமாக மைக்கில் லூயிஸ் 57, காவெம் ஹோட்ஜ் 55 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.

- Advertisement -

இறுதியில் 82 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சரவெடியாக விளையாடினார். குறிப்பாக டி20 கிரிக்கெட்டை போல வெளுத்து வாங்கிய அவர் 24 பந்துகளில் 50 ரன்கள் தொட்டார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதமடித்த இங்கிலாந்து வீரர் என்ற ஜாம்பவான் இயன் போத்தமின் 43 வருட சாதனையை உடைத்த அவர் புதிய வரலாற்றுச் சாதனை படைத்தார்.

இதற்கு முன் கடந்த 1981ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக டெல்லியில் இயன் போத்தம் 28 பந்துகளில் 50 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அவருடைய அதிரடியால் 4.2 ஓவரில் இங்கிலாந்து 50 ரன்கள் கடந்தது. அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதமடித்த அணி என்ற தங்களது சொந்த உலக சாதனையை இங்கிலாந்து சமன் செய்தது.

இதையும் படிங்க: 6.3 ஓவரில் 81 ரன்ஸ்.. மழையையும் தாண்டி இலங்கை நொறுக்கிய இந்தியா.. 2024இல் ஜெய்ஸ்வால் உலக சாதனை

இதற்கு முன் இதே தொடரின் 2வது போட்டியிலும் இங்கிலாந்து 4.2 ஓவரில் 50 ரன்கள் அடித்திருந்தது. அந்த வகையில் வெளுத்து வாங்கி பென் ஸ்டோக்ஸ் 9 பவுண்டரி 2 சிக்சருடன் 57* (28) ரன்களும் பென் டக்கெட் 26* (16) ரன்களும் எடுத்ததால் 7.2 ஓவரிலேயே 87/0 ரன்கள் எடுத்த இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அதனால் 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்த இங்கிலாந்து கடந்த மார்ச் மாதம் இந்தியாவிடம் சந்தித்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்து கோப்பையை வென்றது.

Advertisement