இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 27ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடரில் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் புதிய கேப்டன் சூரியகுமார் தலைமையில் முதல் முறையாக இந்தியா களமிறங்குகிறது. அதே போல சுப்மன் கில் துணை கேப்டனாக தன்னுடைய பயணத்தை துவங்க உள்ளார்.
சமீப வருடங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஓரளவு நன்றாக செயல்படும் அவர் இந்தியாவின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தினார். அதனால் ஆல் ஃபார்மட் பிளேயராக கருதும் தேர்வுக்குழு அவரை வருங்கால கேப்டனாக வளர்க்க முடிவெடுத்துள்ளது. அதனாலேயே சமீபத்திய ஜிம்பாப்வே டி20 தொடரில் சுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
ஒரே பக்கத்தில்:
உண்மையில் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மாவுக்கு பின் ஹர்திக் பாண்டியா டி20 கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் 2024 டி20 உலகக் கோப்பை உட்பட 2022க்குப்பின் பாண்டியா தான் இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வந்தார். ஆனால் ஃபிட்னஸ் இல்லை என்று சொல்லி அவரை கழற்றி விட்டுள்ள கம்பீர் துணை கேப்டனாக சுப்மன் கில்லை தேர்ந்தெடுத்துள்ளார்.
இந்நிலையில் கௌதம் கம்பீருடன் முதல் முறையாக இணைந்து தற்போது தான் வேலை செய்வதாக சுப்மன் கில் தெரிவித்துள்ளார். அதில் இதுவரை செய்த வலைப்பயிற்சியில் 2 செசனிலேயே கம்பீர் எப்படி செயல்படுவார் என்பதை தெளிவாக புரிந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி முதல் டி20 போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் கில் பேசியது பின்வருமாறு.
“இதுவரை நாங்கள் வெறும் 2 செஷன்களில் மட்டுமே ஒன்றாக இணைந்து செயல்பட்டோம். குறிப்பாக கௌதம் கம்பீருடன் இணைந்து நான் வேலை செய்வது இதுவே முதல் முறையாகும். ஆனால் இந்த 2 செஷன்களில் அவர் என்னிடம் சொன்ன விஷயங்களும் அவரது நோக்கமும் தகவல் தொடர்பும் மிகவும் தெளிவாக இருந்தது. எந்த வீரரிடமிருந்து எதை பெற வேண்டும், ஒவ்வொரு வீரருக்கும் என்ன வேலை செய்யும் என்பது அவருக்கு நன்றாகத் தெரிகிறது”
இதையும் படிங்க: எனக்கு பிடிச்ச கேப்டன் தோனி, விராட், ரோஹித் கிடையாது.. ஆனா அவங்க இதை செஞ்சுருக்காங்க.. பும்ரா பேட்டி
“அதே போல சூரியகுமார் மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோரின் எண்ணங்களும் மனநிலைமையும் ஒரே பக்கத்தில் நிற்கிறது என்று நினைக்கிறேன். சூர்யகுமார் பாய் தலைமையில் நான் தென்னாபிரிக்காவில் விளையாடியுள்ளேன். அவர்கள் இருவருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான புரிதலை கொண்டுள்ளார்கள். அந்த தாக்கத்தை நீங்கள் களத்தில் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.



