ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இம்முறை 1996 உலகக் கோப்பைக்கு பின் முதல் முறையாக பாகிஸ்தானில் ஒரு ஐசிசி தொடர் நடைபெறுகிறது. சொல்லப்போனால் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு ஐசிசி தொடர் முழுமையாக பாகிஸ்தான் மண்ணில் நடைபெறுவதும் இதுவே முதல் முறையாகும்.
எனவே அதை வெற்றிகரமாக நடத்துவதற்கு தேவையான வேலைகளை பாகிஸ்தான் வாரியம் செய்து வருகிறது. ஆனால் அந்த தொடரில் விளையாட மாட்டோம் என்று இந்தியா ஆரம்பத்திலேயே அடம் பிடிக்க துவங்கி விட்டது. ஏனெனில் எல்லைப்பிரச்சினை காரணமாக 2008க்குப்பின் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை இந்தியா முற்றிலும் நிறுத்தியுள்ளது.
விளைவை சந்திப்பிங்க:
அத்துடன் 2012க்குப்பின் இருதரப்பு தொடர்களையும் நிறுத்தியுள்ள இந்தியா ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே பாகிஸ்தானுடன் விளையாடி வருகிறது. ஆனால் அதிலும் 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானில் விளையாடாத இந்தியா தஙகள் போட்டிகளை இலங்கையில் விளையாடி வெற்றியும் கண்டது. அதே போல இம்முறை தங்களுடைய சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்துமாறு ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதனால் இம்முறையும் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. இந்நிலையில் ஒருவேளை 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியா விளையாட மறுத்தால் அவர்களை ஒதுக்கி வைத்து விட்டு தொடரை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவோம் என பாகிஸ்தான் வீரர் ஹஸன் அலி தெரிவித்துள்ளார். எனவே பாகிஸ்தானுக்கு வர மறுத்தால் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் மொத்தமாக விளையாட முடியாத விளைவை இந்தியா சந்திக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இது பற்றி சாமா தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த வருடம் நாங்கள் இந்தியாவுக்கு சென்று விளையாடியதைப் போல அவர்கள் தற்போது பாகிஸ்தானுக்கு வர வேண்டும். விளையாட்டு அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்று பலரும் எண்ணற்ற முறை சொல்லி விட்டனர். அதே போல இந்திய வீரர்கள் பாகிஸ்தானில் விளையாட விரும்புவதை அவர்களுடைய பேட்டிகளில் பார்க்க முடிகிறது”
இதையும் படிங்க: ஜடேஜா ஓகே.. ஆனா காரணமே இல்லாம அவரை ஏன் கழற்றி விட்டீங்க.. ஆகாஷ் சோப்ரா குழப்பம்
“ஆனால் அவர்கள் சொந்தக் கொள்கைகளை வைத்துள்ளனர். எனவே அவர்களது வாரியம் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும். மறுபுறம் எங்கள் வாரியத் தலைவர் சாம்பியன்ஸ் டிராபி நடந்தால் அது பாகிஸ்தானில் தான் நடக்கும் என்று ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளார். எனவே இந்தியா வரவில்லை என்றால் நாங்கள் அவர்கள் இல்லாமல் விளையாடுவோம். இந்தத் தொடர் பாகிஸ்தானில் நடைபெற வேண்டும். ஒருவேளை இந்தியா வரவில்லையெனில் அத்தோடு அனைத்தும் முடிந்து விடாது. இந்தியாவையும் தாண்டி இங்கே பல நல்ல அணிகள் உள்ளன” என்று கூறினார்.



