விரைவில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. அந்தத் தொடர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மாவுக்கு பின் ஹர்திக் பாண்டியா புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை துணைக் கேப்டனாக கூட நியமிக்காத தேர்வுக்குழு சூர்யகுமாரை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது.
அதே போல சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் அபிஷேக் ஷர்மா மற்றும் ருதுராஜ் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றினர். ஆனால் அவர்களையும் டி20 தொடரில் கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு சுமாராக விளையாடிய ரியான் பராக்கை தேர்வு செய்துள்ளது. அதை விட ஜிம்பாப்வே தொடரில் சுயநலத்துடன் விளையாடியதாக ரசிகர்களின் விமர்சனங்களை பெற்ற சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
குழப்பமான தேர்வுகள்:
இது போக ஒருநாள் அணியில் கடைசியாக சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்த சஞ்சு சாம்சன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அதே போல 2024 டி20 உலகக் கோப்பையுடன் 20 ஓவர் போட்டிகளில் மட்டும் ஓய்வு பெற்ற ஜடேஜா ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அவருக்கும் இலங்கை ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இருப்பினும் கௌதம் கம்பீர் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோரை 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் ஆல் ரவுண்டர்களாக பயன்படுத்த முடிவெடுத்துள்ளார். அதனாலயே ரவீந்திர ஜடேஜா ஒருநாள் அணியிலும் கழற்றி விடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா பரவாயில்லை ஆனால் காரணமின்றி குல்தீப் யாதவ் இலங்கை டி20 தொடரில் கழற்றி விடப்பட்டுள்ளது ஏன்? என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா குழப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “டி20 அணியில் குல்தீப் யாதவ் இல்லாதது மிகப்பெரிய ஆச்சரியம். ஏனெனில் 2024 டி20 உலகக் கோப்பை வெல்வதற்கு அவரும் முக்கிய பங்காற்றினார். ஆனால் அவருடைய பெயரும் டி20 அணியில் இல்லை. இங்கே நமக்கு தெரியாதது ஏதாவது நடந்து விட்டதா? கண்டிப்பாக குல்தீப் ஒருநாள் அணியில் இருப்பார்”
இதையும் படிங்க: 71 ரன்ஸ்.. முரட்டு சிக்ஸரால் உடைந்த ஓடு.. தப்பிய ரசிகர்கள் டெயில் எண்டரிடம் திணறிய இங்கிலாந்து.. வெ.இ வெல்லுமா?
“இருப்பினும் டி20 அணியில் அவர் ஏன் இடம் பெறவில்லை என்பதற்கான ஐடியா எனக்கு இல்லை. அதே போல டி20 உலகக் கோப்பையில் தேர்வாகியிருந்த சஹாலும் பெயரும் இல்லை. ரவீந்திர ஜடேஜாவும் ஒருநாள் அணியில் இல்லை. டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட தயாராகவே உள்ளார். ஆனால் அவரை கழற்றி விட்டுள்ள புதிய இந்திய அணி நிர்வாகம் வேறு கோணத்தில் பார்க்கிறதா?” என்று கூறினார்.



