ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்று ஜிம்பாப்வே தொடரிலும் வெற்றி கண்ட இந்தியா அடுத்ததாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு நடைபெறும் 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஹர்திக் பாண்டியாவை கழற்றி விட்டுள்ள அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவும் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் புதிய கேப்டனாக சூர்யகுமாரை நியமித்து அதிரடி காட்டியுள்ளது.
ஆனால் அந்த அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளது ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் நடைபெற்று முடிந்த ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக செயல்பட்ட சுப்மன் கில் அறிமுக வீரர் அபிஷேக் ஷர்மாவுக்கு தம்முடைய ஓப்பனிங் இடத்தை கொடுக்காமல் சுயநலத்துடன் நடந்து கொண்டார்.
நாட்டுப்பற்று இல்லாதவருக்கு:
அத்துடன் 4வது போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வாலை சதமடிக்க விடாத அவர் தன்னுடைய அரை சதத்தை பூர்த்தி செய்து கொண்டார். அதை விட 19 சர்வதேச டி20 இன்னிங்சில் 505 ரன்களை 29.70 என்ற சராசரியில் 139.50 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ள சுப்மன் கில்லை விட ருதுராஜ் 20 இன்னிங்ஸில் 633 ரன்களை 39.56 என்ற சராசரியில் 143.50 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.
மேலும் ஜாம்பவான் தோனியின் நம்பிக்கை பெற்று சிஎஸ்கே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ருதுராஜ் தலைமையில் ஏற்கனவே இந்தியா 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றது. ஆனால் சுப்மன் கில்லை துணைக் கேப்டனாக அறிவித்துள்ள தேர்வுக்குழுவும் கம்பீரும் அவரை இலங்கை தொடரில் பேக்-அப் வீரராக கூட தேர்ந்தெடுக்கவில்லை.
இது ஒரு புறமிருக்க 2024 டி20 உலகக் கோப்பையில் தமக்கு வாய்ப்பு கிடைக்காததால் இந்தியா வென்றால் என்ன? தோற்றால் என்ன? அதை பார்க்கப் போவதில்லை என்று ரியான் பராக் தெரிவித்திருந்தார். அதனால் முதலில் நாட்டுப்பற்றை கற்றுக் கொள்ளுங்கள் பின்னர் இந்தியாவுக்கு விளையாடலாம் என்று ரசிகர்களும் ஸ்ரீசாந்த் போன்ற சில முன்னாள் வீரர்களும் அவரை கடுமையாக விமர்சித்தனர்.
அந்த சூழ்நிலையில் ஜிம்பாப்பே தொடரில் ரியான் பராக் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் ஜோடியாக அறிமுகமானவர்கள். அதில் அபிஷேக் ஷர்மா 2வது போட்டியில் சதமடித்து இந்தியாவை 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். ஆனால் அதே தொடரில் ரியான் பராக் 2 (3), 22 (24) என மொத்தம் 24 ரன்களை 100க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து சொதப்பினார்.
இதையும் படிங்க: இந்திய டி20 அணிக்கு கேப்டனாக ஹார்டிக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படாமல் போனதற்கு – காரணம் இதுதானாம்
இருப்பினும் நாட்டுப்பற்று இல்லாத அவருக்கு இலங்கை சுற்றுப்பயணத்தில் டி20 மற்றும் ஒருநாள் ஆகிய 2 தொடர்களிலும் வாய்ப்பு கொடுத்துள்ள தேர்வுக்குழு அபிஷேக் ஷர்மாவை கழற்றி விட்டுள்ளது. அதனால் இதெல்லாம் அநியாயம் என்று தெரிவிக்கும் ரசிகர்கள் அஜித் அகர்கரையும், கம்பீரையும் சமூகவலைதளங்களில் கடுமையாக சாடி வருகின்றனர்.



