ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நிறைவு பெற்ற ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது. குறிப்பாக இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்றது. அந்த வெற்றிக்கு அனைத்து வீரர்களுமே மிகவும் முக்கிய பங்காற்றினர்.
அதே போல 34/3 என இந்தியா தடுமாறிய போது 4வது இடத்தில் களமிறங்கிய அக்சர் படேல் அதிரடியாக 47 (31) ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். பொதுவாக 6, 7 போன்ற இடங்களில் விளையாடக்கூடிய அவர் ஃபைனலில் முன்கூட்டியே வந்து விராட் கோலியுடன் சேர்ந்து சரிந்த இந்தியாவை தூக்கி நிறுத்தினார். இந்நிலையில் அப்போட்டியில் ஆரம்பத்திலேயே 3 விக்கெட் விழுந்ததும் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் தான் தம்மை முன்கூட்டியே பேட்டிங் செய்ய அனுப்பியதாக அக்சர் பட்டேல் கூறியுள்ளார்.
சீனியர்களின் அட்வைஸ்:
அதே போல பிட்ச் எப்படி இருக்கும் என்று தெரியாமல் திகைத்து நின்ற நேரத்தில் விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியாவின் ஆலோசனைகள் உதவியதாகவும் அக்சர் படேல் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் அவுட்டான போது என்னுடைய பின்புறத்தில் நின்று கொண்டிருந்த ரோஹித் பாய் பேட்டிங் செய்யத் தயாராகுமாறு சொன்னார்”
“அடுத்த சில நிமிடங்களில் என்னிடம் ஓடி வந்த சஹால் பயிற்சியாளர் ராகுல் பாய் பேட்டிங் செய்வதற்கு தயாராகுமாறு சொன்னதாக சொன்னார். ஆனால் அப்போது என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் 2 விக்கெட்டுகள் விழுந்த பின்பும் பிட்ச் எப்படி இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த நேரத்தில் சூரியகுமாரும் அவுட்டானார்”
“அப்படி அனைத்து விஷயங்களும் திடீரென நடந்ததால் எதைப் பற்றியும் யோசிக்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை. அப்போது களத்திற்கு சென்ற என்னிடம் “எதற்காகவும் பதறாமல் பந்தை பார்த்து அடி” என்று ஹர்திக் பாண்டியா குஜராத்தி மொழியில் சொன்னார். அது என்னுடன் ஒட்டிக்கொண்டது. அதன் பின் நான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தேன்”
இதையும் படிங்க: என்கிட்ட திறமை இருந்தாலும் இந்தியாவுக்கு விளையாடும் சான்ஸ் கிடைக்க அவர் தான் காரணம்.. ஹர்ஷித் ராணா
“அது எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்த போது விராட் பாய் தொடர்ந்து என்னை வழி நடத்தினார். குறிப்பாக “உன்னால் அடிக்க முடியும் என்று நினைக்கும் பந்துகளை விட்டு விடாதே” என்று விராட் சொன்னார். அந்த வகையில் அனைவரும் என்னை தொடர்ந்து வழி நடத்தியது சிறப்பாக விளையாட உதவியது. அதன் பின் நடந்தது அனைத்தும் வரலாறாக மாறியது” என்று கூறினார்.



