ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற 5வது டி20 போட்டியில் இந்தியா 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஜூலை 14ஆம் தேதி ஹராரே நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 167/6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 58 (45), சிவம் துபே அதிரடியாக 26 (12) ரன்கள் எடுத்தனர்.
ஜிம்பாப்வே சார்பில் அதிகபட்சமாக முஸரபாணி 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 168 ரன்களை துரத்திய ஜிம்பாப்வே மீண்டும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் தடுமாற்றமாக விளையாடி 18.3 ஓவரில் 125 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டியோன் மேயர்ஸ் 34 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 4, சிவம் துபே 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
ஆட்டநாயகன் துபே:
அதனால் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு இத்தொடரில் இந்தியா விளையாடியது. அதில் பெரும்பாலான சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அதனால் சுப்மன் கில் தலைமையில் இளம் வீரர்களுடன் விளையாடிய இந்தியா முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்தது.
ஆனால் அங்கிருந்து சுதாரித்து விளையாடிய இளம் வீரர்கள் அடுத்த 4 போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற வைத்து இந்தியாவை சாம்பியன் என்பதை நிரூபிக்க வைத்துள்ளனர். குறிப்பாக 5வது போட்டியில் வெற்றி பெறுவதற்கு 26 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய சிவம் துபே நாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் ஜிம்பாப்வே மண்ணில் ஆல்ரவுண்டராக அசத்தி ஆட்டநாயகன் விருது வென்றது ஸ்பெஷல் என்று சிவம் துபே கூறியுள்ளார்.
அத்துடன் டி20 கிரிக்கெட்டில் பேட்டிங்கில் தடுமாறும் போது ஒரு அதிரடியான ஷாட்டை அடித்தால் அந்த தன்னம்பிக்கையுடன் கம்பேக் கொடுத்து விடலாம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “2 துறைகளிலும் வெற்றியில் பங்காற்றுவது மிகவும் ஸ்பெஷலானது. இன்று பந்து வீச்சில் சில விக்கெட்டுகள் எடுத்தேன். அதனால் மிகவும் மகிழ்ச்சி”
இதையும் படிங்க: 42 ரன்ஸ்.. சஞ்சு சாம்சன் அபார சாதனை.. 4 – 1.. ஜிம்பாப்வேவை வீழ்த்தி சாம்பியன் என்பதை காட்டிய இந்தியா
“டி20 கிரிக்கெட்டில் நீங்கள் தடுமாறுவீர்கள். ஆனால் அப்போது ஒரு ஷாட்டை அடித்தால் உங்களால் கம்பேக் கொடுக்க முடியும். இந்த மைதானம் பெரிதாக இருந்தது. இருப்பினும் இங்கே நாங்கள் மகிழ்ச்சியுடன் விளையாடினோம். இங்குள்ள சூழ்நிலையும் ரசிகர்களும் மிகவும் அற்புதம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.



