சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிவடைந்த கையோடு இந்திய அணி அடுத்ததாக இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி இன்னும் ஒருசில தினங்களில் அறிவிக்கப்பட்டு அந்த தொடருக்கான பயிற்சியை மேற்கொள்ள இருக்கிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் விளையாடிய சீனியர் வீரர்களான ரோகித், கோலி பும்ரா, ஜடேஜா போன்ற வீரர்களுக்கு இந்த இலங்கை சுற்றுப்பயணத்தில் ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
அதன் காரணமாக கே.எல் ராகுல் தலைமையில் ஒருநாள் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையில் டி20 அணியும் தனித்தனியாக தேர்வு செய்யப்படும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த இருதரப்பு தொடருக்கான போட்டி அட்டவணைகளில் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி வருகிற ஜூலை 26-ஆம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த வேளையில் தற்போது ஒருநாள் தாமதப்படுத்தப்பட்டு 27-ஆம் தேதி போட்டி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டிகளும் ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டு முறையே ஜூலை 28,30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது ஆகஸ்ட் 1-ஆம் தேதியிலிருந்து 2-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 8 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த சம்பவத்தை மீண்டும் அதே மைதானத்தில் செய்து அசத்திய இந்திய அணி – விவரம் இதோ
அதனை தவிர்த்து எஞ்சியுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஆகஸ்ட் 4 மற்றும் 7 தேதிகளில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்படுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



