வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டி ஜூலை பத்தாம் தேதி லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. அதில் எதிர்பார்த்தது போலவே சுமாராக விளையாடிய வெஸ்ட் இண்டீஸை இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்கடித்தது.
அப்போட்டியுடன் இங்கிலாந்தின் ஜாம்பவான் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பிரியா மனதுடன் ஓய்வு பெற்றார். கடந்த 2002இல் அறிமுகமான அவர் ஆரம்ப காலங்களில் சாதாரண பவுலராகவே வலம் வந்தார். ஆனால் வருடங்கள் செல்ல செல்ல தம்முடைய அனுபவத்தால் முன்னேறிய அவர் தமது காலத்தில் ராஜாங்கம் நடத்திய சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி உள்ளிட்ட உலகின் அனைத்து டாப் பேட்ஸ்மேன்களுக்கும் சவாலை கொடுத்த சிறந்த ஸ்விங் வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டார்.
விடைபெற்ற லெஜெண்ட்:
அந்த வகையில் 188 போட்டிகளில் 704 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த வேகப்பந்து வீச்சாளராக உலக சாதனையுடன் விடை பெற்றார். அவருக்கு இந்த போட்டியின் ஆரம்பம் முதல் இறுதி வரை இங்கிலாந்து அணியும் ரசிகர்களும் பிரியா மனதுடன் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பினர்.
இந்நிலையில் 2012இல் இந்தியாவில் வென்றதும் மற்றும் ஆஸ்திரேலியா மண்ணில் ஆஷஸ் தொடர் வென்று ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக முன்னேறியதும் தம்முடைய கேரியரில் மறக்க முடியாத வெற்றி என ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார். அத்துடன் 20 வருடங்கள் ஒரு வேகப்பந்து வீச்சாளராக மகிழ்ச்சியாக பெருமையுடன் விளையாடிய தன்னுடைய கால்கள் ஓடி ஓடி வலியை சந்தித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி உருக்கத்துடன் அவர் பேசியது பின்வருமாறு. “இது அற்புதமான 20 வருடங்கள். ரசிகர்களின் ரியாக்சனை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு முறை ஜெர்சி அணியும் போதும் நான் இங்கிலாந்துக்காக வெற்றியை பெற்றுக் கொடுக்க முயற்சித்தேன். முதல் நாளில் என்னுடைய மகள்கள் மைதானத்தில் இருந்த பெல்லை அடித்ததை பார்ப்பது உணர்ச்சிகளை ஏற்படுத்தியது. குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் நீங்கள் இவ்வளவு வருடங்கள் விளையாட முடியாது”
“ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் வெற்றிகளை பெற்று நம்பர் ஒன் அணியாக முன்னேறியதில் பங்காற்றியது மறக்க முடியாதது. இந்த கடைசி போட்டியில் உணர்ச்சியில் நிறைய மேடு பள்ளங்கள் இருந்தன. வேகப்பந்து வீச்சாளராக விளையாடுவது உங்களுக்கு வலியை கொடுக்கும். ஒரு நாளில் 25 ஓவர்கள் வீசிய பின் நடந்து செல்வது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். அதே சமயம் அது சோர்வையும் கால்களில் வலியையும் உண்டாக்கும்”
இதையும் படிங்க: 21 வருடங்கள்.. 704 விக்கெட்ஸ்.. விடைபெற்ற ஆண்டர்சன்.. வெ.இ அணியை சுருட்டிய இங்கிலாந்து வீரர் 134 வருட சாதனை
“ஒரு வேகப்பந்து வீச்சாளராக 20 வருடங்கள் விளையாடியது பெரிய முயற்சி. இந்த காலகட்டங்களில் பெரிய காயங்கள் இல்லாமல் விளையாடியதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். 2 அணிகளும் எனக்காக இருபுறமும் அணிவகுத்து ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டியது மிகவும் ஸ்பெஷல். அதனால் இப்போதும் என்னுடைய கண்ணீரை நிறுத்த முயற்சிக்கிறேன்” என்று கூறினார்.



