ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்தத் தொடரில் ஆரம்பம் முதலே அசத்திய இந்தியா தொடர்ந்து 8 வெற்றிகளைப் பெற்று ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பை வென்றது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.
முன்னதாக இந்தத் தொடரில் இந்தியாவுக்கு சாதகமாக ஐசிசி நடந்து கொண்டதாக நிறைய விமர்சனங்கள் காணப்பட்டன. குறிப்பாக ட்ரினிடாட் நகரில் நடைபெற்ற முதல் செமி ஃபைனல் இந்திய நேரப்படி அதிகாலை 6:00 மணிக்கு நடைபெற்றது. எனவே அதில் இந்தியா விளையாடினால் பெரும்பாலான இந்திய ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள். அதன் காரணமாக இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றால் கயானா நகரில் தான் விளையாடுமென்று ஆரம்பத்திலேயே ஐசிசி அறிவித்தது.
சாஸ்திரி பதிலடி:
அதனால் இரவு 8:00 மணிக்கு இந்தியா விளையாடிய போட்டியை ரசிகர்கள் கண்டுபிடித்தனர். ஆனால் அப்படி இந்தியாவுக்கு சாதகமாக செமி ஃபைனலை அறிவித்த ஐசிசி மற்ற அணிகளுக்கு அநியாயத்தை செய்ததாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்தார். மேலும் ஒருவேளை ட்ரினிடாட் நகரில் விளையாடியிருந்தால் செமி ஃபைனலில் இந்தியாவை தங்களுடைய இங்கிலாந்து தோற்கடித்திருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்தியாவை விமர்சிப்பதை விட்டுவிட்டு எப்படி தோல்வியை சந்தித்தோம் என்பதை பற்றி இங்கிலாந்துக்கு ஆலோசனை தெரிவிக்குமாறு அவருக்கு ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார். மேலும் இங்கிலாந்து 2 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ள நிலையில் இந்தியா 4 கோப்பைகளை வென்றுள்ளதாகவும் மைக்கேல் வாகனுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
இது பற்றி டைம்ஸ் நவ் இணையத்தில் ரவி சாஸ்திரி பேசியது பின்வருமாறு. “மைக்கேல் தாம் விரும்பும் எதை வேண்டுமானாலும் சொல்வார். அதற்காக இந்தியாவில் யாரும் கவலைப்பட மாட்டார்கள். முதலில் அவர் இங்கிலாந்து அணியின் பிரச்சினைகளை தீர்க்கட்டும். அவர் செமி ஃபைனலில் என்ன என்பது பற்றி இங்கிலாந்து அணிக்கு ஆலோசனை கொடுக்கட்டும். இந்தியா உலகக் கோப்பைகளை வெல்வதை லட்சியமாக வைத்துள்ளது”
இதையும் படிங்க: இந்தியா ஜிம்பாப்வே டி20 தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்.. போட்டி இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு நடைபெறும்?
“இங்கிலாந்து 2 முறை உலகக் கோப்பை வென்றுள்ளார்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் இந்தியா 4 முறை வென்றுள்ளது. மைக்கேல் இதுவரை உலகக் கோப்பை வென்றதாக எனக்குத் தெரியவில்லை. எனவே பேசுவதற்கு முன் இருமுறை சிந்தியுங்கள். அவர் என்னுடைய நண்பர். ஆனால் இதுவே அவருக்கு என்னுடைய பதிலாகும். புளிக்கும் திராட்சைகளை சாப்பிட்டு விட்டு 5 வருடங்களுக்குப் பின் சென்று வரலாற்றுப் புத்தகத்தை சரி பாருங்கள். அதில் இந்தியாவின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும்” என்று கூறினார்.



