நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடம் பிடித்திருந்தன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முக்கிய போட்டியானது ஜூன் 22-ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வங்கதேச அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்தது.
பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற பெரிய இலக்கினை எதிர்த்து களமிறங்கிய வங்கதேச அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் காரணமாக இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு அரையிறுதி சுற்றுக்கும் தகுதி பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்த இந்திய அணிக்கு எதிரான போட்டியின் போது வங்கதேச அணி முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் தன்சின் ஹாசன் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் மட்டுமே களமிறங்கியது. வழக்கமாக மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் அந்த அணி அன்று இரண்டு வேகப்பந்து வீச்சாளர்டளுடன் களமிறங்கியது ஏன்? என்ற கேள்வி எழுந்தது.
அதோடு அந்த அணியின் துணைக்கேப்டனான டஸ்கின் அகமது விளையாடாதது அப்போதே பெரிய அளவில் பேசப்படும் விடயமாக மாறியிருந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.
அந்த வகையில் இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர் டஸ்கின் அகமது தங்கி இருந்த ஓட்டலில் நீண்ட நேரம் தூங்கியதால் அணியின் பேருந்து தவறவிட்டதாக தெரிகிறது. இதன் காரணமாகவே அவரால் அந்த போட்டியில் விளையாட முடியவில்லை. இதனை அவரே தற்போது வெளிப்படுத்தி நான் அதிக நேரம் தூங்கினால் சரியான நேரத்திற்கு எழ முடியவில்லை அதனாலே இந்திய அணிக்கெதிரான போட்டியை தவறவிட்டேன் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : எல்லாரும் வந்துருங்க.. 2024 டி20 உ.கோ வெற்றிப் பேரணிக்காக ரசிகர்களுக்கு ரோஹித் அழைப்பு.. எங்கே எப்போது?
மேலும் நான் செய்தது தவறுதான் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சகவீரர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு உள்ளார். இது ஒரு இயல்பான விடயம் தான் என்றும் இதனால் எந்த பிரச்சினையும் இல்லை. பயிற்சியாளருக்கும் அவருக்கும் எந்த சிக்கலும் கிடையாது என வங்கதேச கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. மேலும் இதற்காக எந்தவித நடவடிக்கையும் அவர் மீது எடுக்கப்படவில்லை என்றும் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



