வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை கோலாகலமாக நிறைவு பெற்றது. ஜூன் மாதம் நடைபெற்ற அந்தத் தொடரில் 20 அணிகள் பங்கேற்றன. அந்த அணிகளை விட சிறப்பாக விளையாடிய இந்தியா லீக் மற்றும், சூப்பர் 8, செமி ஃபைனல் சுற்றுகளில் தோல்வியை சந்திக்காமல் தொடர்ச்சியாக வெற்றி பெற்று ஃபைனலுக்கு தகுதி பெற்றது.
அதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டியில் வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போராடி வென்றது. அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்று இந்தியா வரலாறு படைத்தது. முன்னதாக இந்தத் தொடரில் இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றால் ட்ரினிடாடுக்கு பதிலாக கயானா நகரில் நடைபெறும் 2வது செமி ஃபைனலில் தான் விளையாடும் என்று ஆரம்பத்திலேயே ஐசிசி அறிவித்தது.
கங்குலி பதிலடி:
ஏனெனில் கயானா நகரில் நடைபெறும் போட்டி தான் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறும். ஒருவேளை ட்ரினிடாட் நகரில் காலை 6 மணிக்கு விளையாடினால் அதை பெரும்பாலான இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள். ஆனால் இந்த அறிவிப்பு இந்தியாவுக்கு சாதகமாக அமைந்ததாக மைக்கேல் வாகன், நாசர் ஹுசைன் போன்ற முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள் விமர்சித்தனர்.
குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக ட்ரினிடாட் நகரில் செமி ஃபைனலில் விளையாடியிருந்தால் இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்கும் என்று மைக்கேல் வாகன் தெரிவித்தார். ஆனால் இந்தியாவுக்கு சாதகமாக நடந்து கொண்ட ஐசிசி மற்ற அணிகளுக்கு அநியாயத்தை நிகழ்த்தியதாக அவர் விமர்சித்திருந்தார். இந்நிலையில் தம்முடைய நண்பனான மைக்கேல் வாகனுக்கு இந்த விவகாரத்தில் சௌரவ் கங்குலி பதிலடி கொடுத்துள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “மைக்கேல் வாகன் என்னுடைய அன்பான நண்பர். இருப்பினும் போட்டிகளை 8 மணிக்கு ஒளிபரப்புவதன் வாயிலாக எப்படி இந்தியா வெற்றி பெற ஐசிசி உதவும் என்பது எனக்குத் தெரியவில்லை. முதலில் நேரலை ஒளிபரப்பு எப்படி உங்களுக்கு போட்டியை வென்று கொடுக்கும் என்பது எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் வெற்றிக்கு நீங்கள் மைதானத்தில் விளையாட வேண்டும்”
இதையும் படிங்க: தூங்கிட்டேன் மன்னிச்சுடுங்க.. 2024 டி20 உ.கோ இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வங்கதேச துணை கேப்டன் செய்த காரியம்
“2வதாக இந்தியா அனைத்து மைதானங்களிலும் விளையாடி வெற்றி பெற்றது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கயானாவில் மட்டும் ஏன் வெற்றி பெற மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆம் செயல்பாடுகள், ஒளிபரப்பு, பணம் ஆகியவற்றால் இந்தியா உலக கிரிக்கெட்டின் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. ஒரு நிறுவனத்தின் 80% பங்குகளை வைத்திருப்பவருக்கே அதனுடைய லாபம் மற்றும் டிவிடெண்ட் அதிகமாக கிடைக்கும். அதுவே வாழ்க்கையின் விதிமுறை. இந்தியாவும் அப்படியே” என்று கூறினார்.



