ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை நிர்ணயிக்கப் போகும் இந்த தொடரில் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றில் அசத்திய இந்தியா, நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து செமி ஃபைனல் போட்டிகள் ஜூன் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதில் ட்ரினிடாட் நகரில் நடைபெறும் முதல் செமி ஃபைனலில் தென்னாபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அடுத்ததாக கயானா நகரில் நடைபெறும் 2வது செமி ஃபைனலில் இந்தியா மற்றும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த 4 அணிகளில் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியா இதுவரை தோல்வியே சந்திக்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது.
சாம்பியன் அணி:
எனவே செமி ஃபைனலில் இங்கிலாந்தை தோற்கடித்து ஃபைனலுக்கு சென்று இந்தியா கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர். இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து அணிகளை விட செமி ஃபைனலில் ஆப்கானிஸ்தானை தோற்கடிக்கும் பட்சத்தில் தென்னாப்பிரிக்கா கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ப்ராட் ஹாக் கணித்துள்ளார்.
அதற்கான காரணம் பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர்கள் இங்கிருந்து முட்டையிட்டு வருவது அற்புதமாக இருக்கிறது. ஒரு வீரராக ஹென்றிக்ஸை நான் விரும்புகிறேன். அதை தொடர்ந்து சுழலுக்கு எதிராக சுவரை எழுப்ப கிளாஸின் இருக்கிறார். அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நன்றாக விளையாடி ஃபைனல் அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கிறேன்”
“ஃபைனல் செல்லும் அணியாக தென்னாபிரிக்கா இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர்களிடம் சம்சி, மகாராஜ் போன்ற நல்ல ஸ்பின்னர்களுடன் வலுவான அணி இருக்கிறது. என்னைப் பொறுத்த வரை செமி ஃபைனலை தாண்டினால் இந்த வருட ஃபைனலை தென் ஆப்பிரிக்கா வெல்வார்கள். ஏனெனில் அவர்களிடம் பேலன்ஸ் நிறைந்த அணி மற்றும் ஆக்ரோஷம் இருக்கிறது என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க: 601 நாட்கள்.. வெறும் 2 புள்ளிகள்.. மகுடத்தை ஆஸி வீரரிடம் இழந்த சூரியகுமார்.. ரோஹித், பும்ரா மாஸ் முன்னேற்றம்
“ஐடன் மார்க்ரமை கேப்டனாக நான் விரும்புகிறேன். அவர் மிகவும் சரியாக அமைதியாக செயல்படுகிறார். அழுத்தமான சூழ்நிலைகளில் பதறாமல் சரியான சூழ்நிலைகளை செட்டிங் செய்து விளையாடும் தென்னாபிரிக்கா வெல்லும் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார். அவர் கூறுவது போல இந்த வருடம் பெரும்பாலும் கடைசி ஓவரில் வெற்றிகளை கண்ட தென்னாபிரிக்கா அணியும் இந்தியாவை போல் இதுவரை ஒரு தோல்வியை சந்திக்காமல் செமி ஃபைனல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



