ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 24ஆம் தேதி நடைபெறும் முக்கியமான சூப்பர் 8 போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன. அதில் இந்தியா தங்களுடைய முதல் 2 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை வீழ்த்தியது. அதனால் இப்போட்டியில் சிறிய தோல்வியை சந்தித்தால் கூட ரன்ரேட் அடிப்படையில் இந்தியா செமி ஃபைனல் செல்வதற்கான அதிக வாய்ப்புள்ளது.
ஆனால் 2023 சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனல்களில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா மறக்க முடியாத வலியையும் தோல்வியையும் கொடுத்தது. எனவே இப்போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவை வீட்டுக்கு அனுப்பி வைத்து இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. மறுபுறம் இப்போட்டியில் எப்படியாவது இந்தியாவை தோற்கடித்து செமி ஃபைனலுக்குள் நுழையும் முனைப்புடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.
எச்சரிக்கும் பராமரிப்பாளர்:
அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி செயின்ட் லூசியா நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்குகிறது. முன்னதாக இந்தத் தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காமல் வெற்றி நடை போட்டு வருவதால் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யாமல் இந்திய அணி நிர்வாகம் அடம் பிடித்து வருகிறது. குறிப்பாக விராட் கோலி 3வது இடத்தில் விளையாட வேண்டும் என்று பலர் கேட்டுக் கொண்டும் அது நடைபெறவில்லை.
இந்நிலையில் இப்போட்டியின் பிட்ச் 180 – 200 ரன்கள் அடிக்கும் அளவுக்கு பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என்று செயின்ட் லூசியா மைதான பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார். இங்கே ஸ்பின்னர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்த மாட்டார்கள் என்பதால் சிராஜ் போன்ற எக்ஸ்ட்ரா வேகப்பந்து வீச்சாளர் விளையாடுவது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி செயின்ட் லூசியா மைதான பராமரிப்பாளர் பேசியது பின்வருமாறு.
“இந்த பிட்ச் நன்றாகவும் கடினமாகவும் இருக்கும். இது பகல் நேரப்போட்டி என்பதால் அது அப்படியே இருக்கும். எந்த அணி பேட்டிங் செய்தாலும் 180 – 200 ரன்கள் அடிக்க வேண்டும். இங்கே நாங்கள் முதலில் பேட்டிங் செய்து நல்ல ரன்கள் குவிப்பதை பரிந்துரைப்போம். இங்கே இங்கிலாந்து சுமாராக பேட்டிங் செய்தது. இங்கு அதிகமாக சுழல் இருக்காது. இந்த பிட்ச் கருமண்ணால் உருவாக்கப்பட்டது. எனவே இங்கே அதிகமாக சுழல் இருக்காது”
இதையும் படிங்க: சச்சின் மாதிரி இந்த காரணத்தால் 1990களில் ஆடிருந்தாலும் விராட் கோலி அசத்திருப்பாரு.. ஆம்ப்ரோஸ் பாராட்டு
“நல்ல பவுன்ஸ் இருக்கும். எனவே நாங்கள் எக்ஸ்ட்ரா வேகபந்து வீச்சாளருடன் விளையாடுவதை விரும்புவோம். தொடர்ச்சியாக நல்ல பவுன்ஸ் மற்றும் வேகம் இருக்கும் என்பதால் இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இங்கே பவுலர்கள் நன்றாக வீசவில்லை என்றால் தண்டிக்கப்படுவார்கள்” என்று கூறினார். அதனால் இப்போட்டியில் 3 ஸ்பின்னர்களுடன் விளையாடக்கூடாது என்று அவர் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.



