ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் ஜூன் 9ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளில் பாகிஸ்தான் கடந்த காலங்களில் இந்தியாவுக்கு எதிராக உலகக் கோப்பை போட்டிகளில் பெரும்பாலும் தோல்விகளை மட்டுமே சந்தித்துள்ளது. போதாக்குறைக்கு இந்த உலகக் கோப்பையில் கத்துக்குட்டியான அமெரிக்காவிடம் முதல் போட்டியில் பாகிஸ்தான் அவமானத் தோல்வியை சந்தித்தது.
எனவே இம்முறையும் பாகிஸ்தானின் தோற்கடித்து இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். இந்திய அணியில் விராட் கோலி எப்போதுமே பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார். அதே போல கேப்டன் ரோஹித் சர்மாவும் தன்னுடைய அனுபவத்தால் 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தானில் சொல்லி அடித்ததை மறக்க முடியாது.
சூரியகுமாருக்கு சவால்:
எனவே பேட்டிங்கில் இந்த 2 ஜாம்பவான் வீரர்களும் பாகிஸ்தானுக்கு சவாலாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் விராட் மற்றும் ரோஹித் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடி தங்களை சாம்பியன் வீரர்கள் என்பதை நிரூபித்துள்ளதாக கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார். அந்த வரிசையில் லேட்டஸ்ட் நட்சத்திரமாக உருவெடுத்துள்ள சூரியகுமார் யாதவ் இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக பெரிய ரன்களை எடுத்தால் மட்டுமே உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் என்பதற்கு அர்த்தம் என்று அவர் சவால் விட்டுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி டாப்பில் இருப்பார். இரண்டாவதாக சூரியகுமார் யாதவ். இருப்பினும் பாகிஸ்தானுக்கு எதிராக அவருடைய சிறந்த செயல்பாடு இன்னும் வரவில்லை. ஆனாலும் அவரை இப்போட்டியில் அசத்தக்கூடிய வீரராக நான் தேர்ந்தெடுப்பேன். ரோகித் சர்மா ஏற்கனவே ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக பெரிய ரன்கள் அடித்து தன்னை நிரூபித்தவர்”
“எனவே இது சூரியகுமார் தன்னை நிரூபிப்பதற்கான வாய்ப்பு. ஒருவேளை அவர் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்தால் பாகிஸ்தானுக்கு எதிராக பெரிய ரன்கள் அடிக்க வேண்டும். இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய போட்டிகளில் அவர் பெரிய ரன்கள் அடிக்கவில்லை. இருப்பினும் மற்ற அணிகளுக்கு எதிராக அசத்தியுள்ள அவர் 360 டிகிரி பேட்ஸ்மேன்”
இதையும் படிங்க: 39க்கு ஆல் அவுட்.. உகாண்டாவை சிதைத்த வெஸ்ட் இண்டீஸ்.. பிரம்மாண்ட வெற்றியுடன் உலக சாதனை சமன்
“அவருடைய பேட்டிங்கை பார்ப்பது நன்றாக இருக்கும். அவர் இந்திய அணியில் தம்முடைய இடத்தை குறுகிய காலத்தில் நிரந்தரமாக்கியுள்ளார்” என்று கூறினார். கடந்த 3 வருடங்களில் பாகிஸ்தானுக்கு எதிராக சூரியகுமார் 4 போட்டியில் விளையாடியுள்ளார். ஆனால் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக இருக்கும் அவர் பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை ஒருமுறை கூட 20 ரன்களை தாண்டாமல் மொத்தம் 57 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



