12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா.. பண்ட் அசத்தல்.. 4000 ரன்ஸ்.. ஹிட்மேன் ரோஹித் புதிய உலக சாதனை

IND vs IRE 2
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை எதிர்கொண்டது. அந்தப் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்துக்கு துவக்க வீரர்கள் ஆண்டி பல்பரின் 5 (10), கேப்டன் ஸ்டிர்லிங் 2 (6) ரன்களில் அர்ஷ்தீப் சிங் வேகத்தில் அவுட்டானார்கள்.

அடுத்ததாக வந்த லார்கன் டுக்கர் 10 (13) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மிடில் ஆர்டரில் தடுமாறிய ஹரி டெக்டர் 4 (16) ரன்களில் பும்ரா வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்ததாக வந்து அதிரடியாக விளையாட முயற்சித்த குர்டீஸ் கேம்பர் 12 (8) ரன்களில் ஹர்திக் பாண்டியா வேகத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இந்தியா வெற்றி:
போதாக்குறைக்கு அடுத்து வந்த ஜார்ஜ் டாக்ரேல் 3 (5) மார்க் அடைர் 3 (2) ரன்களில் அவுட்டானதால் அயர்லாந்து 70 ரன்கள் கூட தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது அதிரடியாக விளையாடிய கெராத் டிலானி 26 (14) ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். அதனால் ஓரளவு தப்பிய அயர்லாந்தை 16 ஓவரில் 96 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 3, ஜஸ்ப்ரித் பும்ரா 2, அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதைத்தொடர்ந்து 97 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ஓப்பனிங்கில் களமிறங்கிய விராட் கோலி தடுமாற்றமாக விளையாடி 1 (5) ரன்னில் மார்க் அடைர் வேகத்தில் ஆட்டமிழந்தார். ஆனால் சவாலான பிட்ச்சில் எதிர்ப்புறம் கேப்டன் ரோகித் சர்மா நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடன் அடுத்ததாக வந்த ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் தம்முடைய பங்கிற்கு நிதானமாக விளையாடினார்.

- Advertisement -

அந்த வகையில் இரண்டாவது விக்கெட்டுக்கு 54 ரன்கள் குவித்த இந்த ஜோடியில் கேப்டன் ரோஹித் சர்மா 4 பவுண்டரி 3 சிக்சருடன் 52* (37) ரன்கள் விளாசினார். அப்போது ஒரு பந்தில் ஹெல்மெட்டில் அடி வாங்கியதால் அசௌகரியமாக உணர்ந்த அவர் பாதியிலேயே வெளியேறினார். இருப்பினும் இப்போட்டியில் அடித்த 3 சிக்ஸர்களையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் அவர் 600 சிக்சர்களைக் கடந்தார்.

இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் 600 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையையும் ரோகித் சர்மா படைத்தார். அவருக்கு அடுத்தபடியாக கிறிஸ் கெயில் (553) இரண்டாவது இடத்தில் உள்ளார். அது போக விராட் கோலி மற்றும் பாபர் அசாமுக்கு பின் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்கள் அடித்த 3வது வீரராகவும் ரோகித் சர்மா சாதனை படைத்தார்.

இதையும் படிங்க: 96க்கு ஆல் அவுட்.. அனலாக பந்து வீசி அயர்லாந்தை சுருட்டிய இந்தியா.. பும்ரா புதிய உலக சாதனை

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் சூரியகுமார் 2 (4) ரன்னில் அவுட்டானாலும் ரிஷப் பண்ட் 36* (26) ரன்கள் அடித்து 12.2 ஓவரிலேயே இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். அதனால் முதல் போட்டியிலேயே வென்ற இந்திய கிரிக்கெட் அணி குரூப் ஏ பிரிவில் 2 புள்ளிகளுடன் +3.02 என்ற வலுவான ரன்ரேட் பெற்று 2024 டி20 உலகக் கோப்பையை வெற்றியுடன் துவங்கியுள்ளது.

Advertisement