ஐசிசி 2024 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. அந்தப் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஜூன் 5ஆம் தேதி இதே நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். மேலும் விராட் கோலி துவக்க வீரராக களமிறங்குவார் என்றும் இந்திய அணி நிர்வாகம் அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே திணறிய கேப்டன் பால் ஸ்டர்லிங்கை 2 (6) ரன்களில் காலி செய்த அர்ஷ்தீப் சிங் அதே ஓவரில் மறுபுறம் தடுமாறிய ஆண்டி பால்பரினை 5 (10) ரன்களில் கிளீன் போல்டாக்கினார். அதனால் 9/2 என தடுமாறிய அணிக்கு நிதானமாக விளையாட முயற்சித்த லார்கன் டுக்கர் 10 (13) ரன்களில் ஹர்திக் பாண்டியா வேகத்தில் போல்ட்டானார்.
அசத்திய இந்தியா:
அதே போல எதிர்ப்புறம் தினறிய ஹேரி டெக்டர் 4 (16) ரன்களில் பும்ரா வேகத்தில் நடையை கட்டினார். அடுத்ததாக வந்து அதிரடி காட்ட முயற்சி குர்ட்டிஸ் கேம்பர் 12 (8) ரன்களில் ஹர்திக் பாண்டியா வேகத்தில் அவுட்டானார். அதனால் 44/5 என தடுமாறிய அந்த அணி 100 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்ததாக வந்த ஜார்ஜ் டாக்ரேல் 3 (5), மார்க் அடைர் 3 (2) ரன்களில் அவுட்டாகி அயர்லாந்துக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர்.
இறுதியில் ஜோஸ்வா லிட்டில் 14 (13) ரன்களில் அவுட்டானாலும் கெராத் டிலானி அதிரடியாக விளையாடி 26 (14) ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். ஆனாலும் 16 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அயர்லாந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. மறுபுறம் வேகப்பந்து வீச்சில் அனலாக செயல்பட்டு அயர்லாந்தை ஆல் அவுட்டாக்கிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்டிக் பாண்டியா 3, ஜஸ்ப்ரித் பும்ரா 2, அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
குறிப்பாக கடந்த ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா இப்போட்டியில் அபாரமாக பந்து வீசி தன்னுடைய தரத்தை நிரூபித்துள்ளார். அத்துடன் முகமது சிராஜ், அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். மேலும் இப்போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நாயகன் ஜஸ்ப்ரித் பும்ரா 3 ஓவரில் ஒரு மெய்டன் உட்பட வெறும் 6 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதையும் படிங்க: ஓப்பனிங்கில் கிங் கோலி.. ரோஹித் 2 அதிரடி முடிவு.. ஸ்பின்னர்களே இல்லாத இந்தியாவின் பிளேயிங் லெவன் இதோ
இதையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர் மொத்தம் 11 மெய்டன் ஓவர்கள் வீசியுள்ளார். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முழு அந்தஸ்து பெற்ற நாடுகளில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய வீரர் என்ற புதிய உலக சாதனையும் ஜஸ்ப்ரித் பும்ரா படைத்துள்ளார். இதற்கு முன் இந்தியாவின் புவனேஸ்வர் குமார் 10 மெய்டன் ஓவர்கள் வீசியதே முந்தைய சாதனையாகும்.



